சிவில் நீதிமன்றத்தில் குல்பூஷண் மேல்முறையீடு?

தினமலர்  தினமலர்
சிவில் நீதிமன்றத்தில் குல்பூஷண் மேல்முறையீடு?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ், தூக்கு தண்டனைக்கு எதிராக சிவில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் வகையில், ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (49). இவர், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கைது செய்தது. ஆனால், ஈரானில் வர்த்தகத்தில் ஈடுபட்ட குல்பூஷணை, பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் கடத்தியதாக இந்தியா தெரிவித்தது.
இருப்பினும், குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ கோர்ட், கடந்த 2017 ல் மரண தண்டனை அளித்தது. இதனை எதிர்த்து, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.
இதனை விசாரித்த நீதிமன்றம், குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைத்ததுடன், மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, அவரை இந்திய அதிகாரிகள் சந்தித்தனர்.


பின்னர், சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அப்துல் காவி யூசுப், ஐ.நா., பொது சபையில் கூறுகையில், குல்பூஷண் வழக்கில் வியன்னா உடன்படிக்கைப்படி பாகிஸ்தான் தனது பொறுப்புகளை மீறியுள்ளதாக தெரிவித்தார்.


இந்நிலையில், பாகிஸ்தானில் ராணுவ சட்டத்தில் மாற்றம் செய்ய, இம்ரான் அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்யும் போது, குல்பூஷண், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை