ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமானது தலைநகர் காபூலில் உள்ள கசாபா பகுதியில் அமைந்துள்ளது. காலை நேரம் என்பதால் பரபரப்பாக இயங்கி வந்த இப்பகுதி சாலையில், திடீரென கார் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சக்திவாய்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதலால் அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அருகில் இருந்த கட்டிடங்கள், கடைகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி, கசாபாவின் சரக்-இ-காசிம் வட்டாரத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7:25 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, 7 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும், என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தாக்குதல் நடைபெற்ற பகுதியானது பாதுபாக்கு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இது கண்டிப்பாக தற்கொலைப்படை தாக்குதல் தான். உள்துறை அமைச்சகத்தின் வாகனத்தை குறிவைத்தே இந்த தாக்குதலானது நடப்பட்டுள்ளது. எனவே, உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி யாரையேனும் கொல்ல இந்த தாக்குதலானது நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பல வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை