ஜம்மு - காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு: மீண்டும் உறுதிபட கூறியது அமெரிக்கா

தினமலர்  தினமலர்
ஜம்மு  காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு: மீண்டும் உறுதிபட கூறியது அமெரிக்கா

வாஷிங்டன் : 'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் இந்தியாவின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், அங்குள்ள நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது' என, அமெரிக்கா கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை, இந்திய அரசு, ஆக., 5ல் நீக்கியது. மேலும், மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு, அண்டை நாடான பாக்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஐ.நா., சபை உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பியது.

இந்த விவகாரத்தில், இந்தியா - பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், 'மூன்றாம் நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது' என, இந்திய தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது. அதையடுத்து, அந்தப் பிரச்னையை, அமெரிக்கா கைவிட்டது.

விசாரணை



இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு விவகாரக் குழுவின் ஆசியா, பசிபிக் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடைக்கான துணைக் குழு, 'தெற்காசியாவில் மனித உரிமைகள்' என்ற தலைப்பில் விசாரணை நடத்த உள்ளது.

அதற்கு முன், அமெரிக்க வெளியுறவுத் துறையின் உதவி செயலரான பெண் அதிகாரி, ஆலிஸ் ஜி வெல்ஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறி உள்ளதாவது:'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஊழலை தடுக்கவும், நாட்டின் சட்டங்களை செயல்படுத்தவும், குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக எடுக்கப்பட்டது' என, இந்திய அரசு கூறியுள்ளது. இதை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது.

கவலை



ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியத்தில் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அதே நேரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. அங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இது குறித்து நம் கவலையை தெரிவித்துள்ளோம். குறிப்பாக, தொலை தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டுள்ளது குறித்து நம் கவலையை தெரிவித்து உள்ளோம்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது, அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 'மீதமுள்ளவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்' என, இந்தியா கூறியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு தருகிறோம். அதே நேரத்தில், அங்குள்ள நிலைமை குறித்த கவலையையும் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா மீது வருத்தம்



'இந்தியாவில்,சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது, கவலை அளிக்கிறது. அவர்களுக்கு, சட்டரீதியான பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான, அமெரிக்க வெளியுறவு இணை அதிகாரி ஆலிஸ் ஜி வெல்ஸ், அமெரிக்க பார்லிமென்ட் குழுவிடம் கூறியுள்ளதாவது:

இந்தியா,எங்களின் நெருங்கிய நட்பு நாடு என்பது, அமெரிக்காவுக்கு பெருமை அளிக்கும் விஷயம். அதேநேரத்தில், ஒரு மதச்சார்பற்ற நாடு, தங்கள் நாட்டின் அனைத்து குடிமக்களும், தங்களின் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். சட்டத்தின் முன், அனைத்து குடிமக்களையும் சமமாக கருத வேண்டும்.

இந்தியாவில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் கவலை அளிக்கின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் தாக்குதல்கள் நடக்கின்றன. சிறுபான்மையினருக்கு சட்டரீதியிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

பிந்தரன்வாலே படம் அகற்றம்



அமெரிக்காவின் நார்விச் நகரில் உள்ள ஓடிஸ் நுாலகத்தில், சீக்கிய பயங்கரவாதியான, மறைந்த பிந்தரன்வாலேயின் படம், சில மாதங்களுக்கு முன் வைக்கப்பட்டது. இதற்கு, மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த படத்தை, நுாலக நிர்வாகம் அகற்றியுள்ளது.

தடையாக உள்ள பாக்.,



அமெரிக்க வெளியுறவுத் துறை பெண் அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் மேலும் கூறியதாவது: இந்தியா - பாக்., இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு நடத்திட வேண்டும். கடந்த, 1972ல் உருவாக்கப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்பும் பேச்சு நடத்த வேண்டும். அதற்கு முன், பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தேவை. ஆனால், இதற்கு தடையாக பாக்., உள்ளது.

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியிலும், இந்தியாவிலும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வரும், லஷ்கர் - இ - தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாக்., ஆதரவாக உள்ளது. அந்த அமைப்புகளின் செயல்களுக்கு, பாக்.,கை பொறுப்பாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பண்டிட்கள் கோரிக்கை



அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், காஷ்மீரி பண்டிட்களின், வெளிநாட்டு வாழ் காஷ்மீரிகள் சங்கத்தின் கூட்டம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. அதன்பிறகு, சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கை, நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது.காஷ்மீரி பண்டிட்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை