ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருது இரு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருது இரு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

லண்டன்: ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருதான, ‘புக்கர் பரிசு’ இம்முறை இரு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்ட மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல்களுக்கு ஆண்டுதோறும் உயரிய, புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான புக்கர் விருது, கனடா எழுத்தாளர் மார்க்ரெட் அட்வுட் மற்றும் இங்கிலாந்து எழுத்தாளர் பெர்னார்டைன் எவரிஸ்டோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இவ்விருது ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படும். கடைசியாக 1992ல் இரு எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு, இந்த விதிமுறை மாற்றப்பட்டு, ஒருவருக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு பரிசுப் போட்டியில் அட்வுட் எழுதிய ‘தி டெஸ்டாமென்ட்’ நாவலுக்கும். எவரிஸ்டோ எழுதிய ‘கேர்ள், உமன், அதர்’ நாவலுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இரண்டையும் விட்டுத்தர மனமில்லாத தேர்வுக்குழு, 5 மணி நேர விவாதத்திற்குப் பிறகு புக்கர் பரிசு விதிமுறையை மீண்டும் உடைத்து, இரு எழுத்தாளர்களுக்கும் பரிசை பகிர்ந்தளிக்க முடிவு செய்தனர். இதன்படி பரிசுத் தொகையான ₹45 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.  1969ம் ஆண்டு புக்கர் பரிசு உருவாக்கப்பட்ட பின் இவ்விருது பெறும் முதல் கறுப்பின பெண் என்ற சாதனையையும் எவரிஸ்டோ படைத்துள்ளார்.

மூலக்கதை