பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து

தினமலர்  தினமலர்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து

ஸ்டாக்ஹோம்: 2019ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதுகுறித்து தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.


2019ம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 14) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், டில்லி நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். இதற்கு தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : நோபல் பரிசு பெற்றவர்களை பாராட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறுகையில், உலகளவில் வறுமையை எதிர்கொள்ள பொருளாதார வல்லுநர்களின் ஆய்வு உதவும். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி : வறுமை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பெற்று நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு வாழ்த்துக்கள்.


மே.வ முதல்வர் மம்தா பானர்ஜி : நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துகள் கூறிய மம்தா பேசுகையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள, கொல்கத்தாவின் சவுத் பாயிண்ட் பள்ளி மற்றும் பிரசிடென்சி கல்லூரியின் பழைய மாணவரான அபிஜித் பானர்ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டிற்கு மற்றொரு பெங்காலி பெருமை சேர்த்துள்ளார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.


முதல்வர் பழனிசாமி: நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.


தி.மு.க தலைவர் ஸ்டாலின் : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு எனது வாழ்த்துக்கள். கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உங்கள் கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும்.
நோபல் பரிசு மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள அபிஜித் போன்றோருக்கு தலைவர்கள் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மூலக்கதை