இந்தியாவிற்கு கள்ளநோட்டுக்களை புகுத்தும் பாக்.,

தினமலர்  தினமலர்
இந்தியாவிற்கு கள்ளநோட்டுக்களை புகுத்தும் பாக்.,

லண்டன் : இந்தியாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிப்பதற்காக கள்ளநோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட்டு வருகிறது பாக்.,



கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உயர் பணமதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை 3 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசு பணமதிப்பிழப்பு செய்து, நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்போது லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷி இ முகம்மது போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிப்பதற்காக கள்ள நோட்டுக்களை அச்சடித்து, இந்தியாவிற்கு கடத்தி, புழக்கத்தில் விடும் பணியை பாக்., துவக்கி உள்ளது.

இந்தியாவிற்கு கள்ளநோட்டுக்களை கொண்டு வருவதற்காக நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளின் தூதரக ரீதியிலான உறவை பாக்., தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கள்ள நோட்டுக்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக தத்ரூபமாக பாக்.,ன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ., தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 2019 ம் ஆண்டு மே மாதம், ரூ.76.7 மில்லியன் மதிப்புடைய இந்திய ரூபாய் நோட்டுக்களை கடத்தி வந்ததாக காத்மண்டு விமான நிலையத்தில் 3 பாக்., நாட்டினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


செப்.,22 அன்றும் ரூ.1 மில்லியன் இந்திய ரூபாய் நோட்டுக்களை கடத்தி வந்ததாக இந்தியாவின் பஞ்சாப் போலீசார் ஒருவரை கைது செய்தனர். இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதற்கு முன் இந்திய ரூபாய் நோட்டுக்களை போன்று கள்ளநோட்டுக்கள் அச்சடித்து தரும் முக்கிய இடமாக காத்மண்டு விளங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிற்குள் மீண்டும் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் வருவதை தடுக்க எல்லையில் அனைத்து வகைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை