5 மாதங்களில் 2வது பொதுத்தேர்தல் இஸ்ரேலில் விறுவிறு வாக்குப்பதிவு:பிரதமர் நேதன்யாகுவுக்கு கடும் போட்டி

தினகரன்  தினகரன்
5 மாதங்களில் 2வது பொதுத்தேர்தல் இஸ்ரேலில் விறுவிறு வாக்குப்பதிவு:பிரதமர் நேதன்யாகுவுக்கு கடும் போட்டி

ஜெருசலம்: கடந்த ஐந்து மாதங்களில் 2வது முறையாக இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நேற்று விறுவிறுப்பாக தேர்தல் நடந்தது. இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரலில் தேர்தல் நடைபெற்றது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு (69), பலத்த போட்டிக்குப் பிறகுதான் வெற்றி பெற்றார். இந்நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், இணக்கமான கூட்டணி அரசை ஏற்படுத்த முடியாததால் நாடாளுமன்றத்திற்கு செப்டம்பரில் மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி, நாடாளுமந்றத்திற்கு நேற்று மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது.காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகத்துடன் வாக்களித்தனர். நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 60.3 லட்சம். நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 120 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த தேர்தலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளை சனிக்கிழமையே பதிவு செய்துவிட்டனர். வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் ஏற்கனவே வாக்குப்பதிவு செய்துவிட்டனர்.இந்த பொதுத்தேர்தல் பிரதமர் பெஞ்சமினுக்கு நேதன்யாகுவுக்கு பெரும் சவாலாகத்தான் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருக்கும் இவர், மீண்டும் ஆட்சியில் தொடர மக்களின் ஆதரவைப் பெரும் கருத்துக்  கணிப்பாகவே இந்த தேர்தல் கருதப்படுகிறது. வலதுசாரி கட்சியான லிகுட் கட்சியின் தலைவரான பெஞ்சமின், இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது  முன்னாள் ராணுவ தளபதி பென்னி  கன்டச்சின் சென்டிரிஸ்ட் புளூ அன்ட் வொயிட் கட்சி. பெஞ்சமின் தனது மனைவியுடன் ஜெருசலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கன்டச் வாக்களித்த பின்னர் அளித்த பேட்டியில், ‘‘ஊழல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான  தேர்தல்தான் இது,’’ என்றார்.

மூலக்கதை