அமெரிக்காவில் மோடியை வரவேற்கும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் மோடியை வரவேற்கும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22ம் தேதி நடைபெறும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை நேற்று அறிவித்தது. இது இந்தியா-அமெரிக்கா இடையேயான சிறப்பு நட்பை வெளிப்படுத்துகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐநா பொதுச் சபையில் வரும் 27ம் தேதி  அவர் உரையாற்றுகிறார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். 2வது  முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ஐநா பொதுச்சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற  உள்ளார். இதில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு தலைவர்களை, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் ‘ஹவ்டி மோடி’ என்ற பெயரில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் 22ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ஹவ் டு யூ டு’ (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?) என ஆங்கிலத்தில் நட்பு ரீதியாக கேட்கப்படும் வார்த்தையின் சுருக்கம்தான் ‘ஹவ்டி’. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்கள் ‘ஹவ்டி’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். அதனால் ஹூஸ்டனின் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ‘ஹவ்டி மோடி’ என பெயிரிடப்பட்டது. ஹூஸ்டன் என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய அமெரிக்கர்கள் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது ஹூஸ்டனில் நடைபெறும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை உடனடியாக ஏற்றுக்கொண்ட அதிபர் டிரம்ப், இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, தனது சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டது. அதில், ‘இந்திய-அமெரிக்க மக்களிடையேயான உறவை வலுப்படுத்த மோடி-டிரம்ப் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி சிறப்பான வாய்ப்பாக இருக்கும். உலகின் மிகப் பெரிய இரு ஜனநாயக நாடுகளின் இரு தரப்பு உறவை மேலும் உறுதி செய்யும்’’ என தெரவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப்பின் டிவிட்டரில் தகவல் தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘இந்தியா-அமெரிக்கா இடையோ சிறப்பு நட்பை வெளிப்படுத்துவதாகவும், அமெரிக்க சமுதாயம் மற்றும் பொருளாதாரத்துக்கு இந்தியர்களின் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.மோடி மூலமாக வாக்கு சேகரிப்பு?கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக, நியூஜெர்சி நகரில் இந்திய அமெரிக்கர்கள் 5 ஆயிரம் பேர் கொண்ட நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். அப்போது, ‘நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், இந்தியாவின் சிறந்த நண்பனாக இருப்பேன்’ என கூறினார். அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் பேசுகிறார். இதில் பெரும்பாலானோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். அதனால் அடுத்த அதிபர் தேர்தலில், இந்திய அமெரிக்கர்களின் ஆதரவை பெற, டிரம்ப்புக்கு ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மூலக்கதை