தலிபானுடன் பேச்சு கிடையாது : டிரம்ப் திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
தலிபானுடன் பேச்சு கிடையாது : டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்:' ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளுடனான சண்டைக்கு முடிவு காணப்பட்டு, அமைதி தீர்வு காண்பதில், தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன.மேலும், ஆப்கனில், 19 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து, தன்னை விடுவித்துக் கொள்ள, அமெரிக்கா, முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இதை மையமாக வைத்து, அமெரிக்கா தலைமையில், ஆப்கன் அரசு மற்றும் தலிபான்களுடன், ஒன்பது சுற்று பேச்சு நடந்தது.இந்நிலையில், ஆப்கனில், தலிபான்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.இதை தொடர்ந்து, தலிபான்களுடனான பேச்சை, அமெரிக்கா ரத்து செய்துள்ளது.



இதையடுத்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், நிருபர்களிடம் கூறியதாவது:தலிபான்களுடன் நடத்திய அமைதி பேச்சு முடிந்து போன கதை. இனி ஒரு போதும், தலிபான்களுடன் பேச்சு கிடையாது. அவர்களுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என்பதால் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்தது.ஒரு பக்கம், பேச்சு நடத்திக் கொண்டே, தாக்குதல்களை நடத்தி, நெருக்கடி கொடுக்க, தலிபான்கள் முயற்சிக்கின்றனர்.
என்னால் அதை ஏற்க முடியாது. நான்கு நாட்களாக, தலிபான்கள் மீது, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.தலிபான்களை, ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம். ஆனால், ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறினால், அவர்கள் மீண்டும் உருவாவர். அதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் சரியான நேரத்தில் வெளியேறும்.இவ்வாறு, டிரம்ப் கூறினார்.'அமெரிக்கா வருந்தும்'
தலிபான்களுடனான பேச்சு இனி கிடையாது என, டிரம்ப் கூறியதற்கு பதில் அளித்து, தலிபான் செய்தி தொடர்பாளர், ஜபியுல்லா முஜாஹித் கூறியதாவது:ஆப்கனில் எங்கள் பணிகளை நிறைவேற்ற, இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று, ஜிகாத்; மற்றொன்று பேச்சு. பேச்சை நிறுத்த டிரம்ப் விரும்பினால், நாங்கள், முதல் வழியை கையில் எடுப்போம். இதற்காக, அமெரிக்கா நிச்சயம் வருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மூலக்கதை