காபூலில் தாக்குதல் நடத்தியது பாக்., பயங்கரவாதி

தினமலர்  தினமலர்
காபூலில் தாக்குதல் நடத்தியது பாக்., பயங்கரவாதி

காபூல்:ஆப்கன் தலைநகர் காபூலில், திருமண விழா ஒன்றில், சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில், 93 பேர் உயிரை பறித்தது, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி என்பது தெரிய வந்துள்ளது.
இதை அறிந்த, ஆப்கன் அதிபர், அஷ்ரப் கானி, ''பாகிஸ்தானின் எல்லையோர பகுதிகளில், பதுங்கியுள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகளை அழிப்பேன்,'' என, சபதம் செய்துள்ளார்.ஆப்கன் தலைநகர் காபூலில், இரண்டு நாட்களுக்கு முன், திருமண விழா ஒன்றில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இதில், ௬௩ பேர் இறந்தனர்; ௨௦௦ பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.ஆப்கனில், ௨௦ ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ள அமெரிக்க படைகள், அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. அதற்கு முன், அங்கு தேர்தலை நடத்தி, ஆட்சியை பழையபடி, தலிபான்களிடம் ஒப்படைத்து விடுவது என, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதற்காக, கத்தார் நாட்டில் நடந்த பேச்சில், அமெரிக்க பிரதிநிதிகளும், தலிபான்களும் பங்கேற்றனர். ஆப்கன் அரசு மற்றும் அதிபர் அஷ்ரப் கானியின் பிரதிநிதிகள், இதில் பங்கேற்க அழைக்கப்படவில்லை.அமெரிக்காவின் செயலால், அதிருப்தி அடைந்துள்ள அதிபர், அஷ்ரப் கானி, நேரடியாக அமெரிக்காவை எதிர்க்க முடியாமல், வாய் மூடி மவுனம் சாதிக்கிறார்.இந்நிலையில், சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலால் கொதிப்படைந்துள்ள அவர், 'ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பேன்' என, சபதம் செய்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காபூலில் திருமண விழாவில் தாக்குதல் நடத்தியது, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், பாகிஸ்தான் பயங்கரவாதி தான் என்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானின் மேற்கு பகுதி எல்லையோரங்கள், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கின்றன. அமைதியை விரும்பும் பாகிஸ்தான் மக்கள், அங்கு மறைந்துள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கண்டறிய வேண்டும்.ஆப்கானிஸ்தானியர் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதிலடி கொடுப்பேன். ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கூண்டோடு அழிப்பேன். அதுபோல, தலிபான்களும், பல ஆண்டுகளாக, பள்ளிகள், கல்லுாரிகள், மசூதிகள், மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தி, ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர்; அவர்களையும் ஒழிப்பேன்.இவ்வாறு, அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்து உள்ளார்.அதே நேரத்தில், அமெரிக்காவை, 'உசுப்பேற்றும்' விதமாக, தலிபான் பயங்கரவாதிகள்வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆப்கனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, காபூல் பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது. 'எனவே, ஆப்கனை விட்டு, அமெரிக்கா உடனே வெளியேற வேண்டும்' என, தெரிவித்துள்ளது.'வாங்கி கட்டிக்கொண்ட' பாக்., துாதர் அசாத்ஆப்கனில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள், காஷ்மீர் பிரச்னையால் சீர்குலையும் என, கருத்து தெரிவித்த, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் துாதர், அசாத் மஜீத் கானுக்கு, அமெரிக்காவுக்கான ஆப்கன் துாதர், ரோ ரஹ்மானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாக்., துாதர் அசாத் மஜீத் கானின் பேச்சு, பொறுப்பற்ற தனமாக உள்ளது. தேவையற்ற கருத்தை தெரிவித்து, குழப்பத்தை ஏற்படுத்துகிறார். காஷ்மீர் பிரச்னை, இந்தியா - பாகிஸ்தானுக்கான இரு தரப்பு விவகாரம். இதனால், ஆப்கன் அமைதி முயற்சி பாதிக்கப்படும் என, பாகிஸ்தான் கூறியுள்ளது, அதன் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாத பாகிஸ்தான், ஆப்கன் விவகாரத்தில் தலையிட்டு, பிரச்னையை திசை திருப்ப முயற்சிப்பது சரியல்ல.ஆப்கனால், பாகிஸ்தானுக்கு எந்த நேரத்திலும், எந்த அச்சுறுத்தலும் ஏற்பட்டதில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, பாகிஸ்தானின் மேற்கு எல்லையில், பாக்., படைகளை குவித்துள்ளது, தேவையற்றது.இவ்வாறு, அவர் கூறினார்.குண்டுவெடிப்பு: 30 பேர் படுகாயம்ஆப்கனின் கிழக்கு பகுதியில் உள்ள, ஜலாலாபாத் நகரில், பல இடங்களில் நேற்று, தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், ௩௦க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்தப் பகுதியில், தலிபான்கள் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. எனினும், குண்டுவெடிப்புக்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலக்கதை