கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க்

தினமலர்  தினமலர்
கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க்

நியூயார்க்: மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார், எலான் மஸ்க். இவரது. 'ஸ்பேஸ் எக்ஸ்' தனியார் நிறுவனம் 'பால்கன்- 9' ராக்கெட் மூலம், இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது.


தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியாவில், 1971ல் பிறந்தார், எலான் மஸ்க். இளம் பருவத்திலேயே விண்வெளி ஆய்வில் ஆர்வமாக இருந்தார். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த இவர், இணையதளத்தில் பணபரிவர்த்தனை செய்யும், 'பேபால்' நிறுவனத்தை துவக்கினார். விரைவில் கோடீஸ்வரரானார். தொழிலதிபர், முதலீட்டாளர், பொறியாளர், கார், ராக்கெட் வடிவமைப்பாளர், கண்டுபிடிப்பாளர் என, பன்முகம் கொண்டவராக மாறினார்.

வேகம்... எலான் மஸ்க் தாகம்


* இவர், 2002ல், 'ஸ்பேஸ் எக்ஸ்' தனியார் விண்வெளி மையத்தை துவக்கினார். 2013ல் இவர் உருவாக்கிய பால்கன் ராக்கெட்டுகள், வழக்கம் போல எரிந்து விழாமல், பணி முடித்து பத்திரமாக கீழே இறங்கின. தன் ராக்கெட்டுகள் மூலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு பொருட்களை அனுப்ப உதவினார்

* மனிதர்கள் பயணத்துக்கான, பி.எப்.ஆர்., எனும் ராக்கெட்டை உருவாக்கினார். இதன் மூலம் பூமியின் எந்த ஒரு பகுதிக்கும், ஒரு மணி நேரத்தில் செல்லலாம்

* பி.எப்.ஆர்., ராக்கெட்டுகள் மூலம், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். இங்கு, 2024ல் மனிதர்கள் தங்குவதற்கான காலனிகள் அமைக்கப்படும். 10 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக செவ்வாய் கிரகம் மாறும் என நம்புகிறார்

* மூன்று 'பால்கன் 9' வகை ராக்கெட்டுகளை இணைத்து, வலிமையான , 'பால்கன் ஹெவி' ராக்கெட் உருவாக்கினார். இதன் முகப்பில், வித்தியாசமாக தன் டெஸ்லா காரை பொருத்தினார். டிரைவர் சீட்டில் விண்வெளி வீரர் போல உடை அணிந்த பொம்மையை வைத்தார். 2018, பிப்ரவரி, 6ல் விண்ணில் பாய்ந்த இந்த, 'கார் ராக்கெட்' சூரிய மண்டலத்தை சுற்றி வருகிறது. 'பால்கன் ஹெவி' ராக்கெட் மூலம், நிலவுக்கு இரு விண்வெளி வீரர்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார்

* 'டெஸ்லா' நிறுவனம் மூலம் எலக்ட்ரிக் சூப்பர் கார்களை வடிவமைக்கிறார், எலான் மஸ்க். மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணத்தை செயல்படுத்த உள்ளார். இதன்படி, காற்றழுத்தம் குறைக்கப்பட்ட உருளை வடிவ வாகனத்தில், மணிக்கு அதிகபட்சமாக, 1,200 கி.மீ., வேகத்தில் பறக்கலாம்

* தன் குழந்தைக்கு, கணித, 'பார்முலா' மாதிரி பெயரிட்டது, 'டுவிட்டரில்' இஷ்டத்திற்கு பதிவிடுவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் டெஸ்லா கார் தொழிற்சாலையை திறந்தது என, பல சர்ச்சைகளிலும், எலான் மஸ்க் சிக்கியவர்.

மூலக்கதை