அமெரிக்காவில் பரவும் கலவரம்: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் பரவும் கலவரம்: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த கலவரம் பல நகரங்களுக்கு பரவியுள்ளது. இதனையடுத்து போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் வீசினர்.



அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் கூட இருந்த அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து, மின்னபொலிஸ் நகரில் போராட்டம் வெடித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல், ஆயிரகணக்கானோர், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கட்டுப்படுத்த ராணுவத்தின் போலீஸ் பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுளளது. இந்த போராட்டமானது, லாஸ் ஏஞ்சல்ஸ், வேகாஸ், டெக்சாஸ், டென்னீசி, புளோரிடா, கொலரடோ நகரங்களுக்கும் பரவியுள்ளது.


மின்னபொலிஸ் நகரில் 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டோர் வர்த்தக நிறுவனங்களை சேதப்படுத்தியும், தீ வைக்கவும முயன்றனர். இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்ட முயன்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ், பிலிடெல்பியா, டென்வர், கிளிவ்லாந்து பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதனையும் மீறி போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார், போலீஸ் படையை கலவரம் நடக்கும் இடத்தில் குவித்துள்ளனர். சிறப்பு படை பிரிவினரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.



நியூயார்க்


நியூயார்க் நகரில் போலீஸ் வாகனங்களில் ஏறிக்குதித்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த கடைகளில் பொருட்களை அள்ளி சென்றதுடன், அடித்து நொறுக்கினர். கார்களை தீ வைத்து எரித்தனர்.கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து நொறுக்கினர். கலவரம் தொடர்பாக நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைபட்டது.


இந்நிலையில், போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மேயர், உங்களின் பிரச்னைகள் கேட்டறிந்து தீர்த்து வைக்கப்படும். அனைவரும் வீட்டிற்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது எனக்கூறியுளளார்.


14 பேர் கைது


பிலெ டெல்பியாவில் அமைதியாக நடந்த போராட்டம், கார் தீ வைத்து எரிக்கப்பட்டதும் வன்முறையாக மாறியது. இரவு ரோந்தின் போது, ரிட்டன்ஹவுஸ் சதுக்கம் அருகே உள்ள கட்டடத்திற்கு தீவைக்கப்பட்டது. இதில் 13 போலீசார் காயமடைந்துள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெள்ளை மாளிகை அருகே நடந்த போராட்டத்தின் போது, அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டனர்.


மியாமியில் வன்முறை


மியாமி பகுதியில் நடந்த போராட்டத்திலும் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்களை விரட்ட கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். இதில்,3 போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.இதனையடுத்து வன்முறையாளர்கள் கலைந்து சென்றனர்.


போலீசார் குவிப்பு


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது, அங்கிருந்த சிறிய கடைகள் சூறையாடப்பட்டன. மேலும் பல கடைகளுக்கு போராட்டக்காரர்கள் குறிவைத்துள்ளனர். கடைகளில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை பெட்டி பெட்டியாக எடுத்து செல்கின்றனர். இதனால், தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்கும்படி கவர்னருக்கு மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


டெக்சாஸ்


டெக்சாசில் ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் பகுதிகளில் போராட்டம் அமைதியாக நடந்தது.சிட்டி ஹால் மற்றும் போலீஸ் வாகனங்களை அடித்து சேதப்படுத்த முயன்ற கும்பலை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் பெல்லட்களை வீசி விரட்டினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் ஹூஸ்டன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



மின்னசோட்டாவில், கார்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால், போலீசார் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி அத னை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொது மக்களை அமைதியாக வீடுகளுக்கு செல்லும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

டென்வர், சியாட்டில், அட்லாண்டா போன்ற பகுதிகளிலும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

டிரம்ப்பிற்கு நெருக்கடி


இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களிடம் பேச வேண்டும் என டிரம்ப்பிற்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.டிரம்ப் உரை மூலம் தலைமை பண்பு மற்றும் ஒற்றுமையை காண்பிப்பதுடன், அமெரிக்காவில் வசிக்கும் ஆப்ரிக்கர்களின் ஆதரவை பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கு டிரம்ப் ஆலோசகர் ஜார்ட் குஷ்னர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால், பிரச்னை அதிகரிக்கும் என அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

மூலக்கதை