மோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி தயாரித்த மோரிசன்

தினமலர்  தினமலர்
மோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி தயாரித்த மோரிசன்

சிட்னி: இந்தியாவின் பிரபலமான தின்பண்டமான சமோசா, மாம்பழ சட்னியை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொள்ள தானே தயார் செய்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் டுவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடியும், ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசனும் வரும் 4ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சந்தித்து உரையாட உள்ளனர். இந்நிலையில், ஸ்காட் மோரிசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஞாயிறு சமோசாஸ் மற்றும் மாம்பழ சட்னியுடன் அனைத்தும் புதிதாக தயாரிக்கப்படுகின்றன. இந்த வாரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாட இருப்பதால் பிரதமர் மோடியுடன் சமோசாக்களை பகிர்ந்து கொள்ள முடியாததில் லேசான வருத்தம் உள்ளது. அவர்கள் சைவ உணவு உண்பவர்கள். எனவே அவருடன் இவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்' என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில் ஸ்காட் மோரிசன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸி.,யில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு தள்ளிபோனது. இந்நிலையில், மோடி முதன்முறையாக ஜூன் 4ம் தேதி ஸ்காட் மோரிசனுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இந்தோ பசிபிக் பகுதியில் சீனா தனது ஆக்கிரமிப்பை அதிகரித்து வரும் பின்னணியில், ஆஸ்திரேலியா உடனான இருதரப்பு உறவுகள் மேம்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா விவகாரத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதால் ஆஸி.,- சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதனிடையே ஸ்காட் மோரிசன், இந்தியா தங்களது இயற்கையான நண்பன் என குறிப்பிட்டார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் மருந்து பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் தாது உப்புகள் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென கூறப்படுகிறது.

மூலக்கதை