அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன் : இரு தரப்பு ராணுவ உறவு குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் பேச்சு நடத்தியதாக, அமெரிக்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ''இந்திய - சீன எல்லை பிரச்னையை, இரு நாடுகளுமே சுமுகமாக பேசித் தீர்ப்போம்,'' என, அமெரிக்க ராணுவ அமைச்சரிடம், ராஜ்நாத் சிங் கூறினார். அமெரிக்க ராணுவ தலைமையமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் தொலைபேசியில் பேசினார். அப்போது, இரு தரப்பு ராணுவ உறவை மேம்படுத்துவது குறித்து, இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். மேலும், பிராந்திய பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய - சீன எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'எல்லை பிரச்னையில், இந்திய - சீன நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்க தயார்' என, தெரிவித்திருந்தார். ஆனால், 'இந்த விஷயத்தில் அமெரிக்காவின் தலையீடு அவசியம் இல்லை' என்றும், 'எல்லை பிரச்னையை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம்' என்றும், இந்தியா மற்றும் சீன நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்க ராணுவ அமைச்சருடன் பேசியது குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்திய - சீன எல்லை பிரச்னையை, இரு நாடுகளுமே சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ளும் என்றும், அதற்கான தெளிவான கொள்கை மற்றும் நடைமுறைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளதாகவும், அமெரிக்க ராணுவ அமைச்சரிடம் தெரிவித்தேன். இதில், மூன்றாம் நபர் தலையீடு அவசியமில்லை என்றும் தெரிவித்தேன். சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க, அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுகமாக உறவை பின்பற்ற வேண்டும் என்பதே, மத்திய அரசின் கொள்கை. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை