சமூக ஊடகங்களுக்கு சட்ட பாதுகாப்பை நீக்கி டிரம்ப் உத்தரவு

தினமலர்  தினமலர்
சமூக ஊடகங்களுக்கு சட்ட பாதுகாப்பை நீக்கி டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு உள்ள பாதுகாப்பை விலக்கி அவற்றை சட்ட வளையத்துக்குள் கொண்டு வரும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தலை 'இ -மெயில் மற்றும் ஆன்லைன்' வாயிலாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் இரண்டு பதிவுகளை போட்டிருந்தார். ஆனால் 'இந்த பதிவுகள் தவறானவை; சரிபார்க்கவும்' என டுவிட்டர் நிறுவனம் அடையாளப் படுத்தி இருந்தது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த டிரம்ப் 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் தவறான பதிவுகளை ளியிடுவதாகவும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு உள்ள பாதுகாப்பை நீக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.இதன்படி பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மூன்றாவது நபர் ஒருவர் பதிவு செய்யும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த விவகாரத்தில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு இருந்த பாதுகாப்பு நீத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தங்களுக்குள்ள பாதுகாப்பை பயன்படுத்தி தவறாக பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையிலும் அமெரிக்க மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலும் சமூக ஊடகங்களுக்கு எதிரான நிர்வாக ரீதியிலான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்.

தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்பான்மை அவர்களிடம் உள்ளது. இதற்கான சலுகையை தங்களுக்கான பாதுகாப்பு அரணாக பயன்படுத்தி வருகின்றனர். இனிமேல் அது நடக்காது. தவறான விஷயங்களை பதிவு செய்தால் அவர்களும் சட்ட வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்பின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் நீதிமன்றங்களில் இது குறித்து கடுமையான எதிர்ப்பை டிரம்ப் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே சீனா மீதான தன் எதிர்ப்பையும் டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். சீனாவுக்கு நெருக்கடி தரும் வகையில் இணைய வழியில் உளவு தகவல்களை சேகரிப்பதற்கான விதிமுறைகளை வகுக்கும் ஆய்வு அமைப்பில் அமெரிக்கா இணைந்துள்ளது. கொரோனா வைரசை பரப்பிய சீனாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் நேற்று தெரிவித்தார். அமெரிக்காவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் சீன மாணவர்களை வெளியேற்றவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மூலக்கதை