மரணப் படுக்கையில் தாய்; கொரோனா கட்டுப்பாடுகளை மீறாத பிரதமர்

தினமலர்  தினமலர்
மரணப் படுக்கையில் தாய்; கொரோனா கட்டுப்பாடுகளை மீறாத பிரதமர்

ஆம்ஸ்டெர்டாம்: டச்சு பிரதமரின் தாய் மரணப் படுக்கையில் இருந்த போதும், பராமரிப்பு இல்லங்களை பார்வையிட விதிக்கப்பட்டிருந்த தடையை மதித்து பிரதமர் மார்க் ருட்டே தனது தாயை சென்று காணவில்லை.

பல ஐரோப்பிய நாடுகளை விட குறைவான நிபந்தனைகளுடன், புத்திசாலித்தனமான ஊரடங்கை விதித்தாக நெதர்லாந்து கூறியுள்ளது. மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கின் போதிருந்தே 1.5 மீட்டர் சமூக இடைவெளியுடன் கூடிய சிறிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதியளித்தது. கடைகள் திறந்திருந்தன. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் அழகு நிலையங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் கொரோனாவால் இதுவரை 5,830 பேர் உயிரிழந்துள்ளனர். 45,445 பேர் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் ஹேக் நகரில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் மே 13ம் தேதி தனது 96 வயது தாயார் இறந்ததாக, திங்களன்று டச்சு பிரதமர் ருட்டே அறிவித்தார். “மிகுந்த சோகமும், அன்பான நினைவுகளும் உள்ளன. என் குடும்பமும் நானும் ஒரு நன்றியுணர்வைக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு காலம் அவருடன் நாங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டோம். இப்போது அவரிடம் விடைபெற்றுள்ளோம், எதிர்காலத்தில் இந்த பெரும் இழப்பை சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்.” என உருக்கமாக தெரிவித்தார்.

மார்ச் 20ம் தேதி முதல் கட்ட ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து பராமரிப்பு இல்லங்களை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை பிரதமரும் பின்பற்றி தனது தாயார் மரணப்படுக்கையில் இருந்த போது காண செல்லவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மூலக்கதை