கொரோனா ஊரடங்கை மீறியதற்காக பிலிப்பைன்சில் ஒருவர் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
கொரோனா ஊரடங்கை மீறியதற்காக பிலிப்பைன்சில் ஒருவர் சுட்டுக்கொலை

மணிலா: கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறியதற்காக, பிலிப்பைன்சில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.  தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஊரடங்கு அமலில்  உள்ளது. ஊரடங்கை தீவிரமாக பின்பற்றுமாறு ஜனாதிபதி டூர்ட்டே பொதுமக்களிடம்  வேண்டுகோள் விடுத்தார். அதே நேரத்தில், விதிமுறை மீறுவோரை சுட்டுத் தள்ள  அவர் போலீசாருக்கு அனுமதி வழங்கினார். இந்நிலையில், ஊரடங்கை மீறியதற்காக 63 வயதுடைய ஒருவரை பிலிப்பைன்ஸ் போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் சோதனைச் சாவடியில் காவல்துறையினரை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களையும் தாக்கினார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பிலிப்பைன்சில் ஊரடங்கை மீறியதாக ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்ற முதல் சம்பவம் இதுவாகும். இதனால், அந்நாட்டில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ‘மதுபோதையில் சுற்றித்திரிந்த அவர், அகுசனின் தெற்கு மாகாணமான டெல் நோர்டேவில் உள்ள சோதனைச் சாவடியில் அங்கிருந்த அதிகாரிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். சுகாதார ஊழியர்கள் அவருக்கு முகக் கவசம் அணிய முயன்றபோது, அவர் கோபத்தில் சுகாதார ஊழியரை தாக்கினார். இதன் காரணமாக போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை