கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீன மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீன மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சி

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும்  மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000ஐ நெருங்கியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 74,647 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2.13  லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததால், மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு  வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன.இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனா வைரசால் 3,331 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 81,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தேசிய துக்க தினம்: கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் விதமாக கடந்த ஏப்.4-ம் தேதி தேசிய அளவில் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு சார்பில் ஏப். 4-ம் தேதி  காலை 10 மணிக்கு 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்  பங்கேற்றார். அப்போது விமானம், கார்களில் இருந்து ஒலி எழுப்பி அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து  முதன் முதலாக உலகிற்கு தெரியப்படுத்திய மருத்துவர் லீ வென்லியாங்க் உட்பட, கொரோனாவுக்கு பலியான அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. வுகானில் மவுன அஞ்சலி செலுத்திய போது மக்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று  கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சீனாவில் மட்டுமின்றி, பிற நாடுகளில் உள்ள சீன தூதரகங்களிலும்  தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ‘கிரீன் சிக்னல்’ சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ஓரளவு அடங்கிய நிலையில், வுகான் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அங்குள்ள தொழிற்சாலைகளும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தும், அங்கு  மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சீன அரசு சந்தேகிக்கிறது. அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பர்களை கண்டுபிடிக்க, இங்கு செல்போன் வசதி பயன்படுத்தப்படுகிறது.  தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்பவர்களை சோதனை செய்ய வசதியாக செல்போனில் புதிய அறிவியல் முறையை பின்பற்றுகின்றனர். அதன்படி, பணியாளர் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் பச்சை நிற சிக்னல் மூலம் வாழ்க்கை இயங்கத் தொடங்குகிறது. அதாவது, பச்சை அடையாளம் என்பது ஒரு ‘சுகாதார குறியீடு’ ஆகும். இது, சம்பந்தப்பட்ட நபர் நோய்த்தொற்று  அறிகுறிகளிலிருந்து விடுபட்டுள்ளார் என்பதை கூறுகிறது. சுரங்கப்பாதை பணி, ஓட்டலுக்குள் செல்லுதல், வுகானுக்குள் கடைவீதிகளுக்குள் நுழைய இந்த அடையாளம் அவசியம். சீனாவில் கிட்டத்தட்ட அனைவரும் ஸ்மார்ட்போன்  வைத்திருப்பதால், இந்த சுகாதார குறியீடு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் தரவுகளை முழுமையாக வைத்துள்ள சீன அரசு, மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

மூலக்கதை