'அட்சயபாத்திரமாக மாறிய இந்தியர்கள்': நியூயார்க் மக்களுக்கு தினமும் 30,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்...நெகிழ்ச்சி அடையும் அமெரிக்கர்கள்

தினகரன்  தினகரன்
அட்சயபாத்திரமாக மாறிய இந்தியர்கள்: நியூயார்க் மக்களுக்கு தினமும் 30,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்...நெகிழ்ச்சி அடையும் அமெரிக்கர்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 1,032 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 68,489 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 22,020 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் மட்டும் அதிகபட்சமாக 33,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நியூயார்க் நகரமே முடங்கிப் போயுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். போதிய உணவு கிடைக்காமல் ஏராளமானோர் பரிதவித்து வருகின்றனர். இதனை அடுத்து  நியூயார்க் நகர மேயர் பில் டி பேசியோ அங்குள்ள சீக்கிய மக்களின் குருத்வாராவை கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவிக்காக அணுகினார். தொடர்ந்து, குருத்வாராவிலிருந்து தினமும் 30,000 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு திங்கள் கிழமை முதல் நியூயார்க்கில் பசியால் வாடும் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. சத்தான காய்கறிகள், பருப்புகள், சாதம் உள்ளிட்ட வெஜிடபிள் உணவுகள் தயாரிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்று போதிய பாதுகாப்பான முறையில் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்கப்பட்டு முகத்தில் மாஸ்க் அணிந்து சுத்தமான முறையில் குருத்வாராவில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுகுறித்து அமெரிக்க குருத்வாரா கமிட்டியைச் சேர்ந்த ஹிமத் சிங் கூறுகையில்; உணவுகளை பாதுகாப்பான முறையில் தயாரித்து எங்களது தன்னார்வலர்கள் விநியோகித்து வருகின்றனர். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள், முதியவர்களை அடையாளம் கண்டு உணவுப் பார்சல்களை வழங்கி வருகிறோம். குருத்வாராவில் உள்ள உணவு இருப்புகள் கையிலிருக்கும் வரை இந்தச் சேவையை மேற்கொள்வோம். ஏற்கெனவே நன்கொடைகள் வழியாக உணவுப் பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பில் வைத்துள்ளோம் என கூறிஉள்ளார். கொரோனா அச்சத்தை துச்சமாக மதித்து நியூயார்க் மக்களுக்கு இந்தியர்கள் செய்யும் உதவி காரணமாக அமெரிக்கர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை