இங்கிலாந்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை கொரோனா: பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை கொரோனா: பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் 71 வயதாகும் இளவரசர் சார்லஸ் தனிமைப்படுத்தப்பட்டு தீவீரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 195-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,100-ஆக அதிகரித்துள்ளது. 4,28,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1,09,214 பேர் உலகளவில் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் 143பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 71 வயதாகும் இளவரசர்  சார்ஸுக்கு கரோனா பாதிப்பு இருப்பதை க்ளாரன்ஸ் மாளிகை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட  அறிக்கையில் கூறியதாவது; சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. 71 வயதான சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது அந்த நாட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அடுத்தது பட்டத்துக்கு வரக் கூடியவர் இளவரசர் சார்லஸ். தற்போது ஸ்காட்லாந்தில் தங்கியிருக்கும் நிலையில், இளவரசரும், அவரது மனைவியும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இளவரசர் சார்லஸின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவர் கடந்த சில வாரங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், அவருக்கு யாரிடம் இருந்து கொரோனா பரவியிருக்கும் என்பதை குறிப்பாகக் கண்டுபிடிப்பது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை