சீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
சீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

சியோல்: ‘கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா ஆட்டம் கண்டுள்ள நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸ் பரவினால் கட்டுப்படுத்துவது கடினம்,’ என அமெரிக்க உளவு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ், தென் கொரியா, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தற்போது இந்நோயின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நாட்டில் நேற்று முன்தினம் இந்த  வைரசால் 44 பேர் மட்டுமே இறந்துள்ளனர். புதிதாக 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 78,824 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 2,788 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 256 பேருக்கு இங்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு மொத்தமாக 2,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள டாக்யூ நகரில் தான் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் பேர் உள்ளனர். ஈரானிலும் இந்நோய் வேகமாக பரவி வருவதால், இங்கு மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் 900 பேர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்நிலையில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவினால் அதன் விளைவு படுமோசமாக இருக்கும் என் அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவுவது, அதை தடுக்க அந்நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை அமெரிக்க உளவுத்துறைகள் கண்காணித்து வருகின்றன.  இந்தியாவில் தற்போது வரை மூன்று பேருக்கு மட்டும்தான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். எனினும், 23,531 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தபோதிலும், நாட்டில் கிடைக்கக் கூடிய மருத்துவ சிகிச்சைகள், அதிக மக்கள் தொகை போன்றவற்றால் வைரஸ் வேகமாக பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறைகள் எச்சரித்துள்ளன. ‘அப்படி நடந்தால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதனால், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’ என அவை வலியுறுத்தி உள்ளன.ஜப்பான், தென்கொரிய மக்களுக்கு விசா ரத்துஜப்பான், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்நாடுகளை சேர்ந்தவர்களும் இந்தியா வருவதற்கான விசாவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கிய 119 இந்தியர்கள் நேற்று முன்தினம் அரசின் சிறப்பு விமானம் மூலம் மீட்டு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நைஜீரியாவில் முதல் பாதிப்புநைஜீரியாவில் கொரோனா முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து பணி நிமித்தமாக லாகோஸ் திரும்பிய ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. சிக்கன் விற்பனை சரிவுகடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிக்கறிகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால், இந்தியாவில் பல மாநிலங்களில் மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். இதனால், இந்தியாவில் கோழிக்கறி விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. 4 வாரங்களுக்கு முன் ஒரு வாரத்திற்கு 7 கோடி கோழிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது 4 கோடியாக குறைந்துள்ளது.ஈரான் துணை அதிபருக்கு கொரோனா தாக்குதல்ஈரான் நாட்டின் துணை அதிபரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் ெசய்தி தொடர்பாளர் கியானோஷ் ஜாஹன்போர் கூறுகையில், “ஈரானில் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 245 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். துணை அதிபர் மாஸோமே எப்டேக்கருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,” என்றார். இதேபோல், நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகார கமிட்டி தலைவர் மொஜ்தபா ஜொல்னாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூலக்கதை