ஆஸ்திரேலியாவில் ஒட்டகம்; ஆப்பிரிக்காவில் யானை: போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவில் ஒட்டகம்; ஆப்பிரிக்காவில் யானை: போட்ஸ்வானாவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி

போட்ஸ்வானா: அதிகளவில் தண்ணீர் குடிக்கிறது என 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியா அரசை தொடர்ந்து, ஆப்பிரிக்காவில் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து தண்ணீரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும், வீட்டு வேலிகளை தட்டுவதுடன்,  ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள், மிக அதிகளவில் தண்ணீர் குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றை சுட்டுக்கொல்லும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்தது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஃபெரல் ஒட்டகங்களை சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் அதிகரித்து வந்த யானைகளின் எண்ணிக்கையால் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனித - விலங்கு மோதலை குறைக்கும் முயற்சியாக 70 யானைகளை வேட்டையாடுவதற்கு போட்ஸ்வானா நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக யானைகளை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அதிபர் சமீபத்தில் நீக்கினார். இதனிடையே அதிகரித்து வந்த யானைகளின் எண்ணிக்கையால் விளைநிலங்கள் வீணாவதாகவும், மனித - விலங்கு மோதல் அதிகரித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஏலம் மூலம் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை