சீனாவில் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வுஹான் உள்ளிட்ட நகரங்களில் 5 கோடி மக்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே 90,000 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதித்துள்ளதாக அந்நாட்டு நர்ஸ் ஒருவர் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 450 பேர் வைரஸ் காய்ச்சலால் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் இருந்து பரவிய ‘கொரோனா’ என்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, ஹெனன், ஹெபீ, ஹைனான், ஹீலோங்ஜியாங், ஷாங்காய் போன்ற பகுதிகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் வேகமாக பரவியது.

முதன்முதலாக பீஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு மரணம் நடந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் பெரும் பீதியை ஏற்படுத்திய கொரோனா, இன்றைய நிலையில் சீனாவில் மட்டும் 4,000க்கும் ேமற்பட்டோரை தாக்கி ஆபத்தான நிலையில் வைத்துள்ளது.

தீவிர சிகிச்சை அளித்தும் நேற்றுவரை 82 பேர் பலியான நிலையில், தற்போதைய செய்திகளின்படி ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, சீனாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சீன அரசாங்கம் நோய் குறித்த தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தாலும், வைரஸ் பாதிப்பு குறித்து அதிகாரபூர்வ பதிலை தரமறுப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும், வுஹான் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் சீல் வைக்கப்பட்டதால், கிட்டத்தட்ட சீனா முழுவதும் 5 கோடிக்கும் (50 மில்லியன்) அதிகமான மக்கள் பகுதி அல்லது முழுமையான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும், வுஹான் நகருக்கு செல்லும் அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் இதுவரை 13 நாடுகளில் பரவி 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் சீனாவிற்கு செல்வதை தவிர்க்க தங்களது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வரும் 30ம் தேதி வரை புத்தாண்டு விடுமுறையை, சீன அரசாங்கம் நீட்டித்து பள்ளி, கல்லூரி, பூங்கா, சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள், சினிமா அரங்கு போன்றவற்றை தற்காலிகமாக மூடிவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

வடக்கு துறைமுக நகரமான தியான்ஜின் மற்றும் கிழக்கு மாகாணங்களான ஜெஜியாங் மற்றும் அன்ஹுய் ஆகிய மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரை நாடு முழுவதும் 450 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள். சீனாவில் இருந்து 155 விமானங்களில் வந்த மொத்தம் 33,552 பயணிகள் சோதனைக்கு பின் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை, குறிப்பாக மாணவர்களை வெளியேற்றுமாறு வெளிவிவகார அமைச்சகம், சீன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வுஹானில் படிக்கும் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைத் திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

250 முதல் 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வுஹானில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய சுகாதார செயலாளர் ப்ரீத்தி, நேபாளத்தின் எல்லையான உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுடன், கொரோனா வைரஸ் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து பேசி தற்போதைய சூழல்கள் குறித்து மதிப்பீடு செய்தார்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கான பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு போன்றவை இருக்கும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், வுஹான் மாகாண மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் வீடியோ ஒன்றை அரசுக்கு தெரியாமல் வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் எங்கு கண்டறியப்பட்டதோ அந்த இடத்திலிருந்து பேசுகிறேன்.

நான் இங்கு உங்களிடம் உண்மையை பேச வந்துள்ளேன். சீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீன புத்தாண்டு பிறந்துள்ளது. சீன மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று புத்தாண்டு கொண்டாட விரும்புகின்றனர்.

ஆனால் நிலைமை மோசமாக உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் நீங்கள் எங்கும் வெளியே செல்லாதீர்.

எந்த கொண்டாட்டங்களும் வேண்டாம். வெளியே விற்பனை செய்யப்படும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

பாதுகாப்பாக இருங்கள். புத்தாண்டு ஆண்டுக்கு ஒரு முறை வந்து கொண்டுதான் இருக்கும்.

அடுத்த முறை குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிக் கொள்ளலாம். முதலில் உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்’ என்று பேசியுள்ளார்.

இந்தியாவில் ‘கொரோனா’
கேரளா: சமீபத்திய நாட்களில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய குறைந்தது 436 பேர், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பதாக திருவனந்தபுரத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் ஐந்து பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளின் அனைத்து முடிவுகளும் வைரசுக்கு எதிர்மறையானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று பேர் எர்ணாகுளம் மருத்துவமனைகளில் உள்ளனர். தலா ஒருவர் வீதம் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பத்தனம்திட்டா மற்றும் மலப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சைக்கு பின் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா: சீனாவிலிருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 3,756 பயணிகள் பரிசோதிக்கப்பட்டனர். ஆனால் மும்பையில் இதுவரை கொடிய நோய் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், மகாராஷ்டிராவில் ஐந்து பேர் கண்காணிப்பில் உள்ளனர். முன்ெனச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, பொது சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் வியாஸ் தலைமையில் ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

பீகார்: கடந்த வாரம் சீனாவிலிருந்து திரும்பிய 20 வயதுடைய ஒரு பெண் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நேற்று பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 22ம் தேதி சீனாவிலிருந்து பீகாரின் சாப்ராவுக்கு வீடு திரும்பினார். பஞ்சாப்: அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் வெப்ப சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன.

இன்று மொஹாலி சர்வதேச விமான நிலையத்தில் திரையிடல் கண்காணிப்பு ஒன்று அமைக்கப்பட்டதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் ஏற்கனவே பரிசோதனை மையங்கள் செய்யப்பட்டு வருகிறது.

குஜராத்: குஜராத் மாநிலத்தில் இருந்து 100 மாணவர்கள் சீனாவில் சிக்கியுள்ளதாக மாநில அரசு கூறியதுடன், அம்மாநில முதல்வர் ரூபானி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசியதாகவும், மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அம்மாநில அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா: சீனாவில் இருந்து வந்த மூன்று நபர்கள் ஐதராபாத்தில் மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். இருப்பினும், அவர்களில் இருவர் வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்ட பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கர்நாடகா: கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சீனாவிலிருந்து திரும்பிய பெங்களூரில் வசிக்கும் இரண்டு பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்ததால், அங்குள்ள மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் இல்லை என்பதால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கோவா: வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து கோவாவுக்கு வரும் மக்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக அம்மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தெரிவித்தார்.

.

மூலக்கதை