ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம்

தினகரன்  தினகரன்
ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம்

ஈராக்: ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகளை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதால் இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் ஈரான் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஏவுகணை தாக்குதலை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.சமீப காலங்களில் பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 3-வது ஏவுகணை ஒன்றும் வீசப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை