ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய - சஜித் பிரேமதாசா கடும் போட்டி: இலங்கையில் விறுவிறு வாக்குப்பதிவு... வாக்காளர்கள் வந்த பஸ்சை குறிவைத்து தாக்குதல், துப்பாக்கி சூடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய  சஜித் பிரேமதாசா கடும் போட்டி: இலங்கையில் விறுவிறு வாக்குப்பதிவு... வாக்காளர்கள் வந்த பஸ்சை குறிவைத்து தாக்குதல், துப்பாக்கி சூடு

கொழும்பு: இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், வாக்காளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது, கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், முக்கிய பிரபலங்கள் வாக்களித்தனர். இலங்கையில், 5 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படும்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்காக 35 பேர் போட்டியிடுகின்றனர்.

இலங்கையில் அதிபராகவோ, பிரதமராகவோ, எதிர்க் கட்சித் தலைவராகவோ பதவியிலிருந்தவர், ஒருவர் கூட இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே, அந்த நாட்டின் பொதுஜன பெரமுளா கட்சி சார்பில் அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகிறார்.



இவருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் போட்டியிட சிறிசேனாவுக்கு அவர் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை.

இதனால், வேறு கட்சியைச் சேர்ந்தவருக்கு சிறிசேனா ஆதரவு அளித்துள்ளார்.   அதன்படி, சிறிசேனா ஆதரவளித்துள்ள கோத்தபய ராஜபக்சே, விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போரை முன்னிறுத்தி நடத்தியவர். இதனால், கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்களர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 35 அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் 26 அங்குலத்தில் வாக்குச் சீட்டுகள் வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாரிக்கப்பட்டுள்ளது.



தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், 1 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது.

தேர்தல் முடிந்தபின், நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும். தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் (திங்கட் கிழமை) வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

வாக்குப்பதிவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், இலங்கையின் வடமேற்கு புட்டலம் பகுதியில், வாகனத்தில் சென்ற வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள், துப்பாக்கிச்சூட்டை கண்டு ஓட்டம் பிடித்தனர்.

ேபாலீசார், வாக்காளர்களை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அழைத்துச்சென்றனர்.   வாக்காளர்களை  குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது வாக்காளர்கள் மத்தியில்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான வடக்கு  யாழ்ப்பாணத்தில், காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு  நிலவி வருவதால், அங்கும் மக்கள் எளிதாக வாக்களிக்க முடியவில்லை.

வாக்குப்பதிவுக்கு  இடையூறாக செயல்பட்டால், நீதிமன்றத்தில் முறையிட்டு, குற்றவாளிகள் மீது  வழக்கு தொடரப்படும் என்று உள்ளூர் ராணுவ கமாண்டர்களை எச்சரித்துள்ளனர். தலைநகர் கொழும்புவில் இருந்து 240 கி. மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் வந்து கொண்டிருந்தன.

அப்போது, சாலையின் குறுக்கே டயர்களை தீயிட்டு எரித்து தற்காலிக தடைகளை ஏற்படுத்திய துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள், பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கற்களையும் பேருந்துகள் மீது வீசினர்.



இரண்டு பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. தற்போது, வரை உயிர்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை’ என்றனர்.

இதனிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுளாவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே,  மிரிஹானையில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே, குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

அதேபோல், கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் சஜித் பிரேமதாசாவும், தன் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.


.

மூலக்கதை