விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு : ஆர்தர் ரோடு சிறை வீடியோவை லண்டன் கோர்ட் இன்று ஆய்வு

தினகரன்  தினகரன்
விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு : ஆர்தர் ரோடு சிறை வீடியோவை லண்டன் கோர்ட் இன்று ஆய்வு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் மனுவை விசாரித்து வரும் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட், மும்பை, ஆர்தர் ரோடு சிறைச்சாலை குறித்த வீடியோவை இன்று ஆய்வு செய்கிறது. மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதும் இந்த சிறையில்தான் அடைக்கப்படவுள்ளார். விஜய் மல்லையா தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகளில் ₹9,000 கோடி கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடி விட்டார். அவரை நாடுகடத்திக் கொண்டு வர இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆர்தர் ரோடு சிறையில் தன்னை அடைக்க திட்டமிட்டுள்ள அறை எண் 12ல் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது என்று மல்லையா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்திய அரசு இதை மறுத்தது. கடந்த ஜூலை 31ம் தேதி நடந்த விசாரணையின்போது ஆர்தர் ரோடு சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை தாக்கல் செய்யும்படி இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி சிறைச்சாலையில் உள்ள பல்வேறு வசதிகள் குறித்து வீடியோ எடுத்து இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.இந்த வீடியோவை லண்டன் கோர்ட் இன்று ஆய்வு செய்கிறது. மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் அநேகமாக இதுவே கடைசி விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடந்த 1993ம் ஆண்டில், குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்தும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. நாடு கடத்தப்படும் நபரின் மனித உரிமைகள் மீறப்படாததை உறுதி செய்யும் பொறுப்பு கோர்ட்டுகளுக்கு இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான நாடு கடத்தல் கோரிக்கைகள் இங்கிலாந்து கோர்ட்டுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்திய சிறைச் சாலைகளில் போதிய வசதிகள் இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை