போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு அமெரிக்காவிலும் தற்காலிகமாக தடை: ட்ரம்ப் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு அமெரிக்காவிலும் தற்காலிகமாக தடை: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அனைத்து போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் 737 மேக்ஸ் 9 விமானங்களையும் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை போயிங் விமானங்களின் சேவை ரத்து செய்யப்படும் எனவும் அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியுள்ளார். அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் முக்கியத்துவம் கருதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். ஐந்து மாதங்களில் போயிங் ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். தற்போது எத்தியோப்பியாவில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு விபத்துமே ஒன்று போலவே நடந்துள்ளதாலும் இரு விமானங்களுமே போயிங் ரகத்தை சேர்ந்தவை என்பதாலும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. இதையடுத்து போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் எத்தியோப்பியா நிறுத்தியது. அதே போல சீனா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் இந்த ரக விமானங்களை இயக்க நேற்று முன் தினம் தடை விதித்தது. இந்நிலையில், போயிங் 777 மேக்ஸ் 8, 9 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கர்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மறு உத்தரவு வரும்வரை அந்த ரக விமானங்களை இயக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை