உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்
லண்டன்: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி, உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா, நடப்பு 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை பிடித்துள்ளது.இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால் மக்களின் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக பி.டபிள்யூ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்தும், பிரான்சும் முறையே 5 மற்றும் 6-வது இடத்தில் இருந்தன. தற்போது ‘பிரக்ஸிட்’ பிரச்சனையில் இங்கிலாந்து உள்ளது. இதனால் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களுக்கு இடையேயான மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 2 நாடுகளுமே சமமான மக்கள் தொகையை கொண்டது. இருந்தாலும் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இங்கிலாந்தை 7-வது இடத்துக்கு தள்ளிவிட்டு 6-வது இடத்திலேயே பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான் 3 -வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலுக்குள் மேலும் 18 பேர் வந்துள்ளதாகவும், எனவே கோடீஸ்வரர்கள் 119 பேராக அதிகரித்துள்ளதாகவும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளொன்றுக்கு ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1% உள்ள நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டில் 39% அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொது சுகாதாரத்திற்கான மொத்த வரவு, செலவு முகேஷ் அம்பானியின் 2,80,000 கோடி சொத்து மதிப்பைவிட குறைவு என ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் கூறியுள்ளது.