எகிப்தில் நூற்றுக்கணக்கில் மக்களை கொல்ல காஸ் வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதிகள் சதி அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தினகரன்  தினகரன்

பார்சிலோனா : எகிப்தில் கூட்டத்தில் கார்களை மோதி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், இதை விட பயங்கரமான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரமான பார்சிலோனாவிலும், கடற்கரை சுற்றுலா தலமான கேம்பிரில்சிலும் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூட்டத்தில் கார்களை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை துப்பாக்கி, வெடிகுண்டு போன்றவற்றை மட்டுமே தாக்குதலுக்கு பயன்படுத்தி வந்த தீவிரவாதிகள் தற்போது, ‘வாகன மோதல்’ தாக்குதலை நடத்துவது அதிகமாகி வருகிறது. கேம்பிரில்சில் தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களில் 3 பேர் மொராக்கா நாட்டை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தம் 12 தீவிரவாதிகள் கொண்ட குழு, இந்த 2 தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது. அவர்களில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், 4 தீவிரவாதிகள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். மற்ற 3 தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த 3 பேரில் இருவர், பார்சிலோனாவில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள அல்கனர் நகரில், ஒரு வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் பலியாகி விட்டனர். முதலில், காஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து நடந்ததாக போலீசார் கருதினர். தீவிர விசாரணையில்தான், அது தீவிரவாதிகள் தங்கியிருந்த வீடு என்பதும், அங்கு வெடித்தது காஸ் வெடிகுண்டு என்பதும் தெரியவந்தது. அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 காஸ் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி செயலழிக்கச் செய்தனர். இந்த காஸ் வெடிகுண்டுகளை வாகனங்களில் நிரப்பி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் மிக மோசமான படுபயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்துள்ளனர். அது நடக்காமல் போனதால், நூற்றுக்கணக்கான மனிதர்களின் உயிர் பலி தடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள ஒரு தீவிரவாதியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை