புதிய அரசியலமைப்பு குறித்து 12 கேள்விகளை அரசுக்கு அனுப்பியது சட்டத்தரணிகள் சங்கம்!

என் தமிழ்  என் தமிழ்
புதிய அரசியலமைப்பு குறித்து 12 கேள்விகளை அரசுக்கு அனுப்பியது சட்டத்தரணிகள் சங்கம்!

அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் உறுப்புரைகளின் ஊடாக, “ஏக்கிய ராஜ்ய” , “பெடரல்” வரை (ஒற்றையாட்சி அமைப்பு சமஷ்டி) எவ்வாறு மொழிப்பெயர்ப்புக்கு உள்ளானது என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கோரி, அரசாங்கத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், வினாக்கொத்தொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பில், தெளிவான மற்றும் சரியான பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பதாக, இலங்​கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டு, அந்த வினாக்கொத்து, கடிதமொன்றின் ஊடாக அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கடத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வாவின் கையொப்பத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வினாக்கொத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

01. புதிய அரசமைப்புக்கான தேவை என்ன?

02. (அ) இலங்கை இன்னும் ஒற்றையாட்சியாக இருக்கிறதா?

(ஆ) அப்படியென்றால், ஒற்றையாட்சி எனும் பதத்தை சுருக்கமாக விளக்குக.

03. மாகாணங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்படும்?

04. (அ) மத்திய அரசாங்கத்துக்​கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ, தேவை​யேற்படின், அந்த அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா?

(ஆ) அப்படியாயின் அது எவ்வாறு?

05. ஏதாவது தகுதியான நிலைமையின் கீழ், ஜனாதிபதிக்கு தன்னுடைய அதிகாரங்களை நேரடியாக மாகாணங்களில் செயற்படுத்துவதற்கான இயலுமை உள்ளதா?

06. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுகின்றதா?

07.(அ) நீதிமன்ற முறைமை எப்படி?

(ஆ) அரசமைப்புக்குள் நீதிமன்றம் இருக்கிறதா?

(இ) அப்படியாயின், நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமிக்கப்படுவது எவ்வாறு?

08. (அ) உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியனவற்றுக்கான நீதியரசர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றனர்?

(ஆ) 1. அவ்வாறு நியமிப்பதற்கான ஏதாவது முறைமையொன்று இருக்கின்றதா?

2. அவ்வாறெனின், அந்த முறைமை என்ன?

09. உயர்நீதிமன்ற நீதியரசர்களை நீக்குவது எவ்வாறு?

10. நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களுக்கான நீதவான்கள் மற்றும் நீதிபதிகளை நியமித்தல், அவர்க​ளுக்கு இடமாற்றம் வழங்குதல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியன, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்படுமா?

11. (அ) அரசமைப்பில் செயற்படுத்தக்கூடிய அடிப்படை உரிமை என்ன?

(ஆ) அந்த அடிப்படை உரிமை, எந்த நீதிமன்றத்தின் ஊடாக செயற்படுத்த முடியும்?

12. அரசமைப்புக்கு ஒத்திசைவில்லாத சட்டமூலத்தை, வரையறுக்கப்பட்ட காலத்துக்கு விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா?

உள்ளிட்ட கேள்விகளே அந்த கடிதத்தின் ஊடாகக் கேட்கப்பட்டுள்ளன.

மூலக்கதை