எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி அபராதம்: இலங்கை அரசு புதிய சட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி அபராதம்: இலங்கை அரசு புதிய சட்டம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ. 20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

சில சமயங்களில், மீன்பிடி வலைகளை அறுத்து எறிவதுடன், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்துகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கையை கண்டிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி வந்து தங்களது கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தாலோ, தடை செய்யப்பட்ட இருமடி வலைகளை கொண்டு மீன்பிடித்தாலோ ரூ. 2 முதல் ரூ. 20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் இந்த மசோதாவால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

.

மூலக்கதை