பக்ரைனில் சிக்கித் தவிக்கும் 500 இந்திய தொழிலாளர்கள் : ஊதியம் வழங்கப்படாததால் உணவின்றி அவதி

தினகரன்  தினகரன்

மனாமா: அரபு நாடுகளில் ஒன்றான பக்ரைனில் ஊதியம் கிடைக்காததால் இந்திய தொழிலாளர்கள் 500 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். பக்ரைனில் உள்ள எண்ணெய் கம்பெனிகளில் பல்வேறு வேலைகளுக்காக சென்ற அவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக ஆலை நிர்வாகத்தினர் ஊதியம் சரிவர வழங்கவில்லை. இதனால் உணவு, தண்ணீர்  போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்கமாமல் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். உதவி கேட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்ததால், இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்தது. இந்த தகவலை அறிந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஊதியமின்றி துயரப்படும் இந்திய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும்படி  ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்கள் விவகாரம் பக்ரைன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. அரபு நாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஊதியம் இன்மை, அதிக பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு துயரங்களுக்கு ஆளாவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் இதே போன்று சிக்கி தவித்த சுமார் 88 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை