அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மெக் மாஸ்டர் நியமனம்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மெக்மாஸ்டர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தனது எஸ்டேட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மெக்மாஸ்டர் அமெரிக்க ராணுவத்தின் துணை தளபதியாக பதவி வகித்து வந்தார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். மெக்மாஸ்டரின்நியமனம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப், அசாத்திய திறமை படைத்த மெக் ராணுவத்தில் அனைவராலும் மதிக்கப்படுவார் என புகழாரம் சூட்டினார். இதுகுறித்து பேசிய ட்ரம்ப், கடந்த ஒருவாரமாக மேற்கொண்ட கடும் முயற்சியை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.      அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எச்.ஆர்.மெக் மாஸ்டரை நியமனம் செய்வதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். அசாத்திய திறமை படைத்த இவருக்கு, பாதுகாப்பு துறையில் நல்ல அனுபவம் இருப்பதாக குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக அவரை பற்றி தாம் நிறைய தெரிந்து கொண்டதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ராணுவத்தினரிடையே மெக்கிற்கு நல்ல பெயர் இருப்பதால், அவரை நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டார். முன்னதாக ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதும் பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளிம்ப் என்பவரை நியமித்தார். ஆனால் அவர் ரஷ்யாவுடன் அதிக தொடர்பு வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் எதிரொலியாக பதவி விலகினார். அதை தொடர்ந்து ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ராபர்ட்டை தேர்வு செய்தார் ட்ரம்ப். ஆனால் தனிப்பட்ட காரணங்களை கூறி அவர் தனது நியமனத்தை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மெக் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை