ஜெர்மனி அருகே பயணித்தபோது இந்திய விமானத்தின் தொடர்பு துண்டிப்பு: நடுவானில் போர் விமானங்கள் சூழந்ததால் பரபரப்பு

தினகரன்  தினகரன்

ஜெர்மனி: மும்பையிலிருந்து லண்டன் சென்ற இந்திய விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 16-ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்-777 விமானம் ஒன்று மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. இதில் 330 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் ஜெர்மனியின் காலோன் நகருக்கு மேல் பறந்துக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவானது. இதனையடுத்து ஜெர்மனியின் போர் விமானங்கள் போயிங்-777 விமானத்தை சுற்றிவளைத்தன. இந்நிலையில் சில நிமிடங்களில் விமானத்துடனான தொடர்பு சீரடைந்தது. இருப்பினும் இந்திய விமானத்தை ஜெர்மன் போர் விமானங்கள் பாதுகாப்புடன் அழைத்து சென்றன. போர் விமானங்கள் புடைசூழ இந்திய விமானம் பயணிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தாமதமின்றி குறித்த நேரத்தில் லண்டனை சென்றடைந்ததாக தெரிவித்துள்ள விமான நிறுவனம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளது.

மூலக்கதை