நேவிகேஷன் செயற்கைக்கோளில் கடிகாரங்கள் செயலிழந்தன

தினகரன்  தினகரன்

பாரீஸ்: பூமியில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை கண்டறியவும், அனைத்துவிதமான போக்குவரத்தை கண்காணிக்கவும் ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகவே பல நாடுகளும் நேவிகேஷன் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், கலிலியோ நேவிகேஷன் சிஸ்டம் மூலம் ஜிபிஎஸ் சேவையை வழங்கி வருகிறது. இதற்காக 18 செயற்கைக்கோள்களை அது விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது. ஒவ்வொரு செயற்கைக்கோள்களிலும் 2 ரூபிடியம் கடிகாரங்களும், 2 ஹைட்ரஜன் மாஸ்டர் கடிகாரங்களும் இருக்கும். ஒரு செயற்கைக்கோள் செயல்பட ஒரு கடிகாரமே போதுமானது. மற்றவை எல்லாம் கூடுதலாக பொருத்தப்பட்டவை.  ஒன்று செயல் இழந்தால் மற்ற கடிகாரம் மூலம் செயற்கைக்கோள் செயல்படுவதற்காக அவைகள் பொருத்தப்படுகின்றன. ஐரோப்பிய நிறுவனம் இதுவரை ஏவிய 18 செயற்கைக்கோள்களில் 3 ரூபிடியம் கடிகாரங்களும், 6 ஹைட்ரஜன் மாஸ்டர் கடிகாரங்களும் செயல்படாமல் இருப்பது தற்போது கண்டறிப்பட்டுள்ளது. அதுவும் ஒரே செயற்கைக்கோளில் இரண்டு கடிகாரங்கள் செயல்படாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்(இஎஸ்ஏ) இயக்குனர் ஜெனரல் ஜான் வோர்னர் கூறுகையில், ‘‘அணு கடிகாரங்கள் பழுது காரணமாக இதுவரை எந்த செயற்கைக்கோளின் பணியும் பாதிக்கவில்லை. இருந்தாலும் இந்த பழுது குறித்து கவனமாக இருக்க வேண்டியுள்ளது. கடிகாரம் பழுதுக்கான காரணத்தை ஆராயந்து வருகிறோம். இந்த கடிகாரத்தில் உள்ள அணுக்கள் வெப்பம் அல்லது  ஒளி மூலம் தூண்டப்பட்டு இயங்குபவை. கலிலியோ சிஸ்டத்தில் பொருத்தப்படும் அணு கடிகாரங்கள் மிக துல்லியமானவை என  பெருமை பட்டு வந்தோம். அதில் பழுது ஏற்பட்டுள்ளது கவலை அடையச் செய்துள்ளது. கலிலியோ நேவிகேஷன் சிஸ்டத்தில் மொத்தம் 30 செயற்கைக்கோள்கள் இணைக்கப்படவுள்ளன. இனிமேல் ஏவப்படும் செயற்கைக்கோள்களில் இந்த பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.

மூலக்கதை