ஜல்லிக்கட்டுக்கு கடல் கடந்து வரும் ஆதரவு

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டுக்கு கடல் கடந்து வரும் ஆதரவு

செரிட்டோஸ்: ஜல்லிக்கட்டு தடைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பீட்டா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தடை இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த தடைக்கு எதிர்ப்பு இருந்தாலும், இந்த ஆண்டு அது வலுத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, சாலை மறியல், கருப்பு கொடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்லாது, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட, தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து போராட்டங்கள் நடக்கின்றன.
அமெரிக்காவின் செரிட்டோஸ் தமிழ் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. தமிழ் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தையும் தமிழ் கலாச்சாரத்தின் பெருமையும் எடுத்துரைத்தனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
சீனாவின் ஷங்காய் நகரில் இந்த ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு, தங்கள் பாரம்பரிய விழாவை சிறப்பாக, குதூகலமாக கொண்டாடினர்.
இவ்விழாவில் , பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து பதாகைககள் வைத்து, தங்கள் கண்டனத்தை பதிவை செய்துள்ளர்.

மூலக்கதை