பனிச்சரிவில் புதைந்தது ஓட்டல் 30 பேர் பலி?

தினகரன்  தினகரன்

ரோம்: இத்தாலியில் தொடர்ந்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு ஓட்டல் ஒன்று அப்படியே புதைந்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தாலியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளுக்கும் அதிகமாக பதிவானது. இந்த நிலையில் மத்திய இத்தாலியின் அப்ருசோ நகர் அருகே மலைச்சரிவில்  பரின்டோலா பகுதியில், நிலநடுக்கத்தினால் பனிச்சரிவு ஏற்பட்டு மலையில் இருந்து பெருமளவு பனிக்கட்டிகள் ஓட்டலை அப்படியே மூடின. இதில் அந்த ஓட்டலில் தங்கியிருந்த 30 பேர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உயிருடன் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பனிச்சரிவில் புதைந்த ஓட்டலில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இது தொடர்பாக பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், `‘நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் சிலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பனிக்கட்டிகளை மின்னல் வேகத்தில் அகற்றும் பணி நடக்கிறது’’ என்றார்.

மூலக்கதை