அமெரிக்க அதிபர் தேர்தல் - டொனால்ட் டிரம்ப் முன்னிலை ; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி பின்தங்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க அதிபர் தேர்தல்  டொனால்ட் டிரம்ப் முன்னிலை ; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி பின்தங்கினார்



வாஷிங்டன், - அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய நேரப்படி இன்று காலை 11 மணி அளவில் 244 இடங்களில் டிரம்ப்பும், 210 இடங்களில் ஹிலாரியும் வெற்றிபெற்றுள்ளனர்.   அமெரிக்காவில் புதிய அதிபர், துணை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அங்கு கடந்த பல ஆண்டுகளாக ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

தற்போது ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா 2 முறை பதவியில் இருந்து விட்டார். அமெரிக்க சட்டப்படி 3வது முறை அவர் போட்டியிட முடியாது.

இந்த முறை ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி  சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் டிம் கெய்னும், குடியரசுக் கட்சி  சார்பில் மைக் பென்ஸும் போட்டியிட்டனர்.

இரு பதவிகளுக்கும் வேறு பலரும் போட்டியிட்டனர். ஆனால், அவர்கள் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.


நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர். நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது.

வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குப் பெட்டிகள், வாக்குப் பதிவு  மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில மணி நேரங்களில் ஹிலாரி மற்றும் டிரம்ப் ஆகியோருக்கு இடையே கடும் இழுபறி காணப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் டிரம்ப் படிப்படியாக முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. காலை 7. 30 மணி அளிவில் இருவருக்கும் இடையே 68-66 என்ற அளவில் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இழுபறி காணப்பட்டது.

டெக்சாஸ், அர்கன்சாஸ் ஆகிய மாநிலங்களில் டிரம்ப் வெற்றி முகத்தில் உள்ளார்.

அதே போல் புளோரிடா, ஒகியோ, வர்ஜினியா, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து டிரம்ப் நிலைமையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படத் தொடங்கியது.

8. 30 மணி அளவில் ஹிலாரியை முந்திக் கொண்டு டிரம்ப் 136-104 என்ற அளவில் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். மொத்தம் 270 பெற்றால் வெற்றி என்ற நிலையில் டிரம்பின் நிலவரம் படிப்படியாக முன்னேற்றம் காணப்படத் தொடங்கியது.

அமெரிக்க ஊடகங்கள் அனைத்தும் வெள்ளை மாளிகையை நோக்கி டிரம்ப் வெற்றி நடை போடத் தொடங்கிவிட்டார் என செய்திகள் வெளியிடத் தொடங்கி விட்டன.

காலை 10 மணி நிலவரப்படி ஹிலாரி முன்னிலை வகிக்க தொடங்கினார்.

அப்போது ஹிலாரி டிரம்ப் ஆகியோர் 190-171 என்ற அளவில் காணப்பட்டனர். இந்த சூழலில் மீண்டும் டிரம்பின் நிலவரம் வெற்றி முகத்தை நோக்கி மீண்டும் திரும்பியது.

காலை 11 மணி நேரப்படி ஹிலாரி 210 என்ற நிலையிலும், டிரம்ப் 244 என்ற நிலையிலும் போட்டியில் உள்ளனர்.

எனவே தற்போதைய நிலவரப்படி டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

.

மூலக்கதை