டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்தது - அமைதியாக ஆட்சி மாற்றம் ஏற்பட ஒபாமா, ஹிலாரி வேண்டுகோள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்தது  அமைதியாக ஆட்சி மாற்றம் ஏற்பட ஒபாமா, ஹிலாரி வேண்டுகோள்


வாஷிங்டன், -அமெரிக்காவில் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை டிரம்ப் சந்தித்து பேசினார்.

டிரம்ப் ஆட்சி மாற்றத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக ஒபாமா உறுதி கூறினார்.   அமெரிக்காவில் அதிபர் ேதர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார்.

இதற்கு முன்பு இருவரும் சந்தித்ததே இல்லை. தேர்தலுக்கு முன் இருவரும் மேடையில் ஒருவரையொருவர் கடுமையான விமர்சனங்களால் தாக்கியிருந்தனர்.

இந்நிலையில், டிரம்ப் மரியாதை நிமித்தமாக ஒபாமாவை சந்தித்துள்ளார். ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, டிரம்பின் மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.



 பின்னர், டிரம்ப் முறைப்படி பதவியேற்று ஆட்சி புரிய முழு ஒத்துழைப்பை அளிப்பதாக ஒபாமா உறுதி கூறியுள்ளார். இதுகுறித்து ஒபாமா கூறுகையில், ‘வெற்றி பெற்ற டிரம்ப் ஆட்சியமைக்க முழுமையான அதிகாரம் மற்றும் அலுவல் மாற்றங்களை செய்து தர என்னாலான அனைத்து உதவிகளையும் செய்வேன்.

நாட்டு நலன் கருதி அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தில் அமைதியுடன் ஒற்றுமையாக வேண்டும்’’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகிற ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார்.

ஆனால், ேதர்தல் முடிவுகளில் மக்கள் அளித்த ஓட்டுகளில் டிரம்ப்பை விட அதிகமாக ஹிலாரி பெற்றுள்ளார். ஹிலாரி 5 கோடி 99 லட்சத்து 23,027 ஓட்டுகளும், டிரம்ப் 5 கோடி 96 லட்சத்து 92,974 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

ஹிலாரி 2 லட்சத்து 30,053 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தல் முறைப்படி 538 எலக்ட்டோரல் ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்பதால் 279 எலக்ட்டோரல் ஓட்டுகளை பெற்ற டிரம்ப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹிலாரிக்கு 228 ஓட்டுகளே கிடைத்தன.
இதனால், ஜனநாயக கட்சியினரும் மற்றும் பல்வேறு தரப்பினரும் டிரம்ப் வெற்றியை ஏற்காமல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை முன், “இவர் எங்கள் அதிபர் இல்லை” என்ற பேனரை ஏந்தியபடி இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, போஸ்டன், கலிபோர்னியா, கொலராடோ, சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லேன்ட், அட்லாண்டா, அஸ்டின், டென்வர், சான் பிரான்சிஸ்கோ மற்றும் பிறநகரங்களிலும் மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். பல இடங்களில் டிரம்ப் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

சியாட்டிலில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

போராட்டம் நடந்த இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

எனினும், துப்பாக்கி சூட்டிற்கும், போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என காவல்துறை மறுத்துள்ளது. இந்நிலையில், ஹிலாரி பேசுகையில், ‘‘எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டிரம்புக்கு எனது வாழ்த்துகள்.

ஒபாமா கூறியது போல அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அமெரிக்கர்கள் அனைவருக்கும் டிரம்ப் சிறந்த அதிபராக இருப்பார் என நம்புகிறேன்.

அவரை அனைவரும் ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.

மூலக்கதை