பிரிவினைவாதிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை: மெஹபூபா

தினமணி  தினமணி
பிரிவினைவாதிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை: மெஹபூபா

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 2 நாள்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 26 எம்.பி.க்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழுவினர் முதல்வர் மெஹபூபா முஃப்தியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். அங்குள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச கருத்தரங்கு மையத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காஷ்மீர் மாநில கல்வி அமைச்சர் நயீம் அக்தர், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, காஷ்மீரில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்புக்குப் பின், மெஹபூபா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அனைத்துக் கட்சிக் குழுவினரை இன்று சந்தித்தேன். அனைத்துத் தரப்பினருடனும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். நல்லிணக்கம் மற்றும் மாநிலத்துக்குள்ளும், எல்லை கடந்தும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை ஊக்குவிப்பதில் உறுதிபூண்டிருப்பதையும் எடுத்துக் கூறினேன் என்று மெஹபூபா குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கட்சிக் குழு நம்பிக்கை: இதனிடையே, மெஹபூபாவுடனான சந்திப்புக்குப் பின், கட்சி ரீதியிலான வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தனர். காஷ்மீர் அமைச்சர் நயீம் அக்தர் கூறுகையில், "பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் இணைவது அவசியம். வன்முறை எத்தனை நாளைக்கு நீடிக்கும்? அது ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும்' என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமஞமான குலாம் நபி ஆஸாத் கூறுகையில், "எங்கள் குழுவினர் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்கத் தயாராக உள்ளது. எங்களின் இந்தப் பயணமானது காஷ்மீருக்கு நன்மை பயப்பதாக அமையும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் அமைதியையே விரும்புகின்றனர். எங்களின் வருகையானது, காஷ்மீர் அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் கலந்துரையாடுவதற்கு ஒரு நல்வாய்ப்பாகும்' என்றார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி கூறுகையில், "பிரிவினைவாதிகளையும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் கூட சந்தித்துப் பேச நான் விரும்புகிறேன்' என்று தெரிவித்தார். அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு மூத்த தலைவரான மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவினர் 2 மாதங்களுக்கு முன்பே சென்றிருக்க வேண்டும். இப்போதாவது மாற்றம் ஏற்படும் என்று நம்புவோம்' என்றார்.

மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "அனைத்துக் கட்சிகளும் அரசுடன் ஒத்துழைத்து வருகிறோம். மாநிலத்தில் இயல்புநிலையை ஏற்படுத்துவது எங்கள் ஒரே நோக்கமாகும். நிலைமையை புத்திசாலித்தனமாகக் கையாள்வது மத்திய அரசின் பொறுப்பாகும்' என்றார். முன்னதாக, காஷ்மீருக்கு 29 எம்.பி.க்களை அனுப்புவது என்று உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும் மூன்று எம்.பி.க்கள் வராத காரணத்தால் 26 எம்.பி.க்கள் மட்டுமே அங்கு சென்றுள்ளனர்.

இக்குழுவினர் பல்வேறு தரப்பினருடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அனைத்துக் கட்சிக் குழுவினரை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை