துப்பாக்கி சூடு நடந்ததாக பரபரப்பு லாஸ்ஏஞ்சல்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக...

தினத்தந்தி  தினத்தந்தி
துப்பாக்கி சூடு நடந்ததாக பரபரப்பு லாஸ்ஏஞ்சல்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக...

லாஸ்ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென்று துப்பாக்கியால் சுடுவதுபோல் சத்தம் கேட்டது. இதனால் அங்கு துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அலாரமும் ஒலிக்கப்பட்டதால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மேலும் பீதிக்கு உள்ளாயினர். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இன்னும் சிலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தரையோடு தரையாக படுத்துக் கொண்டனர். இதையடுத்து, விமான நிலையத்தின் பல்வேறு முனையங்களில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமான நிலையம் தற்காலிகமாக சிறிது நேரம் மூடப்பட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது.

லாஸ்ஏஞ்சல்ஸ் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் பொருட்கள் ஏதாவது விமான நிலையத்துக்குள் கிடக்கிறதா? என்றும் சோதனையிட்டனர். சோதனையில் எதுவும் சிக்காததால் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்பட்டது வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே, பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான ‘ஜோரோ’ போல் கறுப்பு நிற முகமூடி, தொப்பி மற்றும் கோட்டு அணிந்து வந்த ஒருவர் விமான நிலையத்தில் போலீசாரிடம் சிக்கினார். துப்பாக்கியால் தொடர்ச்சியாக சுடுவதுபோன்ற சத்தத்தை அவர்தான் எழுப்பியிருக்கவேண்டும் என்று சந்தேகிக்கப்படுவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மூலக்கதை