அணு உலைகளை குண்டுவீச்சில் இருந்து காப்பாற்ற ரஷ்யாவின் S-300 ஏவுகணைகளை...

தினத்தந்தி  தினத்தந்தி
அணு உலைகளை குண்டுவீச்சில் இருந்து காப்பாற்ற ரஷ்யாவின் S300 ஏவுகணைகளை...

தெஹ்ரான்,

ஈரான் அணு உலைகளை எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய ரேடார் தொழில்நுட்பம் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியது. இந்த ரேடார் கண்காணிப்பில் சிக்காமல் ஈரானுக்குள் தாக்குதல் தொடுக்க வரும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டறியக் கூடிய சக்தி கொண்டதாகும். 3 ஆயிரம் மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை கூட இந்த ரேடார் கண்டறிந்து முன்கூட்டியே தெரிவித்துவிடும்.

அணு ஆயுத பிரச்சனையில் ஈரான் மீது ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்திருந்ததால் கடந்த 2010–ம் ஆண்டில் இருந்து ஈரானுக்கு எஸ்–300 ரக ஏவுகணைகளை சப்ளை செய்ய ரஷ்யா மறுத்துவிட்டது. இந்நிலையில் தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து மீண்டும் ஈரானுக்கு எஸ்-300 ரக ஏவுகணைகள் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரான் தனது நாட்டில் உள்ள அணு உலைகளை குண்டுவீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க எஸ்-300 ஏவுகணைகளை பயன்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அங்கு போர்டோ எனுமிடத்தில் தரைக்கடியில் அமைந்துள்ள அணு உலையை பாதுகாக்க வெளிப்புறத்தில் சுற்றிலும் S-300 ஏவுகணைகளை நிறுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் வீடியோவுடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த ஏவுகணையை ஈரான் தன் வசம் வைத்திருக்க கூடாது என அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை