ஏமனில் குண்டு வெடித்து 60 பேர் பலி : ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அட்டூழியம்

தினமலர்  தினமலர்
ஏமனில் குண்டு வெடித்து 60 பேர் பலி : ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஏடன்: ஏமன் நாட்டில், ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில், 60 பேர், உடல் சிதறி பலியாயினர்; 30 பேர் காயம்அடைந்தனர். மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஏமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி ஆதரவு படைக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் சண்டை நடந்து வருகிறது. அந்நாட்டின் பெரும்பகுதி, தற்போது, கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டு அரசு, ஏடன் நகரில் இருந்து செயல்பட்டு வருகிறது. தெற்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அல் - குவைதா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏடன் நகரில், ராணுவ மையத்தில் நேற்று, ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் நடந்தது; இதற்காக, பலர் வரிசையில் காத்திருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த ஒரு பயங்கரவாதி, குண்டை வெடிக்கச் செய்தான்.

இந்த கொடூர தாக்குதலில், 60 பேர் உடல் சிதறி பலியாயினர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, ஏடன் நகரில், அரசுப்படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.


முடங்கிய அரசு நிர்வாகம் : ஏமனில், அதிபர் ஹைதிக்கு ஆதரவாக, சவுதி அரேபிய ராணுவம், ஹவுத்தி கிளர்ச்சிப் படை மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹைதி படைக்கு, ஈரான் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 2015ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரில், இதுவரை, 7,000 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரக்கணக்கானோர். இடம் பெயர்ந்து விட்டனர். இதையடுத்து, ஐ.நா., தலையீட்டில், பேச்சுவார்த்தை நடக்கிறது; ஆனால், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை