தலைமை செயலர் உட்பட 12 அதிகாரிகள் மாற்றம்: பதவி ஏற்ற 60 நாட்களுக்குப்பின் ஓ.பி.எஸ்., வேகம்
தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் உட்பட, 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நேற்று, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். புதிய தலைமை செயலராக, மின்வாரிய தலைவராக இருந்த ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற, 60 நாட்களுக்கு பிறகு, அவரது செயல்பாட்டில் வேகம் பிடித்துள்ளது.
முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஓரிருவர் மட்டும் மாற்றப்பட்டனர்.நேற்று, அதிரடியாக, தலைமைச் செயலர் மோகன்வர்கீஸ் சுங்கத், மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன், பொதுப்பணித் துறை செயலர் சாய்குமார், வருவாய் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை செயலர் பழனியப்பன், உணவுத்துறை செயலர் நிர்மலா உட்பட, 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஏன் மாற்றம்? சட்டசபை கூட உள்ள நிலையில், தலைமையிடத்தில் இருந்த அதிகாரிகள், அதிரடியாக மாற்றப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தலை மைச் செயலக வட்டாரங்களில் கூறியதாவது:மோகன் வர்கீஸ் சுங்கத், தலைமை செயலர் பொறுப்பில் நியமிக்கப்பட்டதில் இருந்து, ஏராளமான சுதந்திரத்தை எதிர்பார்த்தார். பொதுவாக, யாருக்கும் தேவையில்லாமல், அவர் வணக்கம் தெரிவிக்க மாட்டார். அதிகார மையமாக இருந்தாலும், யாரையும் வீடு தேடி சென்று பார்க்கும் பழக்கம் இல்லாதவர்.
முதல் சிக்கல்: எனவே, அரசு ஆலோசகர் என்ற பொறுப்பில், ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதை, மோகன் வர்கீஸ் சுங்கத் விரும்பவில்லை. ஷீலா பாலகிருஷ்ணன், ஆலோசகர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே, அவர் தான், அரசின் தலைமை செயலர் போல் செயல்பட்டு வந்தார். பெரும்பாலான துறை செயலர்கள், ஷீலா பாலகிருஷ்ணனையே தொடர்பு கொண்டனர். துறை தொடர்பான பணிகள், திட்டங்கள், ஒப்புதல்கள் குறித்து ஆலோசகரின் ஒப்புதலை பெற்றனர். முறையான ஒப்புதலுக்காக மட்டும், கோப்புகளை, தலைமை செயலருக்கு அனுப்பி வைத்தனர். இப்படி கோப்புகள் வரும்போது, அவற்றின் மீது எழும் சந்தேகம் குறித்து, சுங்கத், சம்பந்தப்பட்ட செயலர்களிடம் கேட்டால், 'ஏற்கனவே, ஆலோசகர் கோப்புகளைப் பார்த்து, 'ஓகே' சொல்லி விட்டார்' என, பதில் கிடைத்தது.இதனால், தன்னை, 'ரப்பர் ஸ்டாம்ப்'பாக வைத்திருக்கின்றனர் என்ற புழுக்கத்தில் இருந்து வந்தார் சுங்கத். பல கோப்புகளையும் தொடர்ச்சியாக, கிடப்பில் போட்டு வைத்தார். இது, அரசு தரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. துறை செயலர்கள், முதல்வர் பன்னீர்செல்வத்திடம் புகார் தெரிவித்தனர். முதல்வரின் சிறப்பு செயலர்களாக இருக்கும், ராம் மோகன் ராவ், ஷீலா ப்ரியா, வெங்கட்ராமன், ராமலிங்கம் பரிந்துரைக்கும் கோப்புகளும் தேங்கத் துவங்கின. அவர்களும், முதல்வர் மற்றும் அவரைத் தாண்டியும், சுங்கத் மீது புகார்களை அடுக்கினர். எனவே, சுங்கத்தை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க, சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுத்தனர்.
இரண்டாவது சிக்கல் : முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக சென்ற தமிழக பொது பணித் துறை செயற் பொறியாளர் மாதவன், கேரள கட்சியினரால் தாக்கப்பட்டார். இது குறித்து, தமிழக பொதுப் பணித் துறை ஊழியர்கள் சிலர், தலைமை செயலர் சுங்கத்திடம், முறையிட்டனர். 'தமிழக அரசு, தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும்' என, கூறினர். எனவே, தலைமை செயலர் சுங்கத், கேரள தலைமை செயலருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்,
'இனிமேல், பிரச்னை எற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கேரள அரசு
தான் பொறுப்பேற்க
வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. கடிதம் எழுதப்பட்ட சில
மணி நேரங்களில், பத்திரிகைகள், 'டிவி'க்களில் செய்தி வெளி வந்தது. இதனால்,
கேரள அரசுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. கேரள முதல்வர் உம்மன் சாண்டியின்
அறிவுரைப்படி, அம்மாநில தலைமைச் செயலர், தமிழகத்தில் உள்ள ஷீலா
பாலகிருஷ்ணனிடம் பேசினார்.'மிரட்டல் விடுப்பது போல், ஒரு மாநில தலைமை
செயலர், பக்கத்து மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதுவதும், அதை
பத்திரிகைகளுக்கு வெளியிடுவதும், கொந்தளிப்பை அதிகரிக்க செய்யும். இனியும்
இப்படி நடந்தால், கேரள அரசும் பதிலடி கொடுக்கும்' என, கேரள தலைமை செயலர்
கூறியுள்ளார்.இது, சுங்கத்தால் விளைந்த பெரும் தர்ம சங்கடமாகவே, தமிழக
ஆட்சி மேலிடம் கருதியது.கடித விவகாரம், பத்திரிகைகளுக்கு எப்படி வெளியானது
என்பது குறித்து, உளவுத் துறை போலீசார் விசாரணைக்கு தமிழக அரசு
உத்தரவிடப்பட்டது.
மூன்றாவது சிக்கல் : தமிழக அரசு பல்வேறு நிதி நெருக்கடியில்சிக்கித் தவித்து வருகிறது. அது குறித்த கோப்புகள், நிலுவையில் உள்ளன. பல்வேறு திட்டங்கள் அடிப்படையில், தமிழக அரசுக்கு நிதி வழங்கிய ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, 'நபார்டு' வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் அனுப்பிய கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது, அரசுத் தரப்புக்கு சுங்கத் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நான்காவது சிக்கல் : கடந்த வாரத்தில், ஆட்சி மேலிடத்திற்கு பிடிக்காத, பரபரப்பு பிரமுகர் ஒருவர், சுங்கத்தை சந்தித்து பேசியதாக, உளவு வட்டாரங்களில் இருந்து தகவல் போனது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு, அரசிதழில் வெளியானதை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த, சிக்கல்கள் தான், சுங்கத் மாற்றத்துக்கு காரணம்.இவ்வாறு, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொறுப்பேற்பு: புதிய தலைமைச் செயலர் ஞானதேசிகன், நேற்று மாலை, 4:35 மணிக்கு பொறுப்பேற்றார்; அதன்பின் முதல்வரை சந்தித்தார். ஞானதேசிகனுக்கு, அரசு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பயோடேட்டா :புதிய தலைமை செயலர் ஞானதேசிகன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர்.இவர், 1959 ஏப்ரல், 16ம் தேதி பிறந்தார். பி.இ., பட்டதாரி. இங்கிலாந்தில், சமூக அறிவியலில், எம்.பி.ஏ., படித்துள்ளார்.கடந்த, 1982ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். 1991ல், விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். மின்வாரியத் தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலர், நிதித்துறை முதன்மை செயலர், உள்துறை முதன்மை செயலர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார்.
ஒரே ஆண்டில் 3 செயலர்கள்! வீட்டுவசதி
வாரியம், குடிசை மாற்று வாரியம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
(சி.எம்.டி.ஏ.,), நகர் மற்றும் ஊரமைப்புத்துறை (டி.டி.சி.பி.,), கூட்டுறவு
வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் உள்ளன.இத்துறையில் செயலராக
இருந்த தங்க கலிய பெருமாள் கடந்த
ஏப்ரல் இறுதியில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில்
இருந்ததால், முந்தைய செயலரான பனீந்திர ரெட்டி தற்காலிகமாக இத்துறை செயலர்
பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.தேர்தல் நடத்தை விதிகள்
முடிவுக்கு வந்ததும், மே மாத இறுதியில், மோகன் பியாரே இத்துறை செயலராக
நியமிக்கப்பட்டார். இவர் அக்டோபர் இறுதியில், ஒரு மாதம் விடுப்பு எடுத்து
பயிற்சிக்காக வெளிநாடு சென்றார். அப்போது, பனீந்திர ரெட்டி, இத்துறை
பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.விடுப்பு முடிந்து, நேற்று முன்தினம்
வீட்டுவசதி துறை செயலர் பொறுப்பை மோகன் பியாரேமீண்டும் ஏற்றார். அவர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, தர்மேந்திர பிரதாப் யாதவ் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.நடப்பு ஆண்டில் இத்துறை செயலராக பொறுப்பேற்கும், மூன்றாவது அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன? மோகன் பியாரே, வீட்டுவசதி துறை செயலராகவும், சி.எம்.டி.ஏ., துணை தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த பதவி காலத்தில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யக் கோரும் மனுக்களை ஆய்வு செய்வதற்கான மேல்முறையீட்டு குழு கூட்டங்களில், பெரும்பாலான தனியார் கட்டடங்களை வரன்முறை செய்ய ஒப்புக்கொள்ளாதது, பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சி.எம்.டி.ஏ.,வில் நடந்த நிர்வாக குளறுபடிகளை கண்டித்தது, மவுலிவாக்கம் கட்டட விபத்து வழக்கில் இவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்களால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.தற்போதைய இடமாற்றத்தின் பின்னணியில் இக்காரணங்களும் இருக்கலாம் என வீட்டுவசதித் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பிற அதிகாரிகள் மாற்றம் ஏன்? பிற துறை அதிகாரிகள் மாற்றத்திற்கும், பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகனை, முதல்வர் அலுவலக செயலர்கள் தேர்வு செய்துள்ளனர்.காலியான, மின்வாரியத் தலைவர் பதவிக்கு, பொதுப்பணித்துறை செயலர் சாய்குமாரை நியமித்துள்ளனர். பொதுப்பணித்துறை செயலர் பதவிக்கு பழனியப்பனை, முதல்வர் தேர்வு செய்துள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் நலன் துறை செயலராக இருந்த நிர்மலா, தனியார் நிறுவனத்திடம் இருந்து, அதிக விலைக்கு பருப்பு கொள்முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
