இந்திய வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு

ஆன்டிகுவா: விண்டீஸ் சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.


விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ல் ஆன்டிகுவாவில் துவங்குகிறது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய வீரர்கள், விண்டீஸ் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்றனர். இதனிடையே கடந்த 16ம் தேதி முகவரி தெரியாத 'இ-மெயில்' ஒன்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு வந்தது. அனுப்பியவர் அல்லது எந்த பிரிவினர் என்ற விவரம் எதுவும் இல்லை.


அந்த மெயிலில்,' விண்டீசில் உள்ள இந்திய வீரர்கள் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது. இவர்கள் மீது உடனடியாக தாக்குதல் நடத்தப்படலாம்,' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பி.சி.பி., இந்த 'மெயிலை' சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,) உடனடியாக அனுப்பி வைத்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 'மெயில்' இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) அனுப்பப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைமை அதிகாரி ராகுல் ஜோரி கூறுகையில், ''மிரட்டல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆன்டிகுவாவில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். மும்பை போலீசிடமும் தெரிவிக்கப்பட்டது. விண்டீசில் உள்ள வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


மற்றொரு நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''வீரர்களுக்கு மிரட்டல் என்பது பொய்யான தகவல் என்ற போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய வீரர்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் 'பைலட்' வாகனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை