திருமண மண்டபத்தில் தாக்குதல் ஆப்கனில் 63 பேர் படுகொலை

தினமலர்  தினமலர்
திருமண மண்டபத்தில் தாக்குதல் ஆப்கனில் 63 பேர் படுகொலை

காபூல்:ஆப்கனில், ஷியா முஸ்லிம் திருமண விழாவில் நடத்தப்பட்ட, மனித வெடிகுண்டு தாக்குதலில், 63 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; 180 பேர் படுகாயம் அடைந்தனர்.
முஸ்லிம்களில் ஷியா, ஷன்னி என, இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. ஐ.எஸ்., மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஷன்னி பிரிவினர். பிற மதத்தினருக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள், ஷியா பிரிவு முஸ்லிம்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.கொண்டாட்டம்தலைநகர் காபூலில், ஷியா பிரிவு முஸ்லிம் திருமணம், பெரிய மண்டபம் ஒன்றில் நேற்று முன்தினம் நடந்தது. 1,200க்கும் மேற்பட்டோர், திருமணத்திற்கு அழைக்கப்பட்டுஇருந்தனர். காலையில் துவங்கிய கொண்டாட்டம், மாலை வரை நீடித்தது. அவர்கள் வழக்கப்படி, ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் அமர்ந்து, திருமணத்தை, மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, அந்த மண்டபத்தில் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
புகை மூட்டம்
ஆண்கள் பகுதியில் இருந்த அவன், திடீர் தாக்குதல் நடத்தியதால், இறந்தவர்களில் ஏராளமானோர் ஆண்கள் மற்றும் சிறுவர்கள். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சிலரும், படுகாயம் அடைந்தனர்.தாக்குதல் நடந்த, 20 நிமிடங்களுக்கு புகை மூட்டமாக இருந்ததால், என்ன நடந்தது என்பதே, யாருக்கும் தெரியவில்லை. அதற்குப் பின் பார்த்தால், கை வேறு, கால் வேறு, தலை வேறாக உடல்கள் சிதறி, ஆங்காங்கே கிடந்தன. 63 பேர் கொல்லப்பட்டிருந்தனர்; 180 பேர், கை, கால், கண்களை இழந்து, படுகாயம் அடைந்தனர்.எனினும், இந்த கொடூர தாக்குதலில், மணமகன் - மணமகள் உயிர் தப்பினர். ஆனால், அவர்களின் நெருங்கிய உறவுகள் பலர், அந்த மங்கல நாளில் மரணம் அடைந்து விட்டனர். ''இந்த சோகத்தில் இருந்து என்னால், எந்த காலத்திலும் மீள முடியாது,'' என, 24 வயது மணமகன், மிர்மியாஸ் கூறினார்.
கண்காணிப்பு
ஆப்கனில் அமெரிக்க படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதுபோல, ஆப்கன் படை வீரர்களும், கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர். அவர்கள் கண்ணில் மண்ணை துாவி, தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தியுள்ளான்; அவன் எந்த பயங்கரவாத பிரிவை சேர்ந்தவன் என்பது தெரியவில்லை.
சோகம்
திருமண விழாக்கள், மத விழாக்கள், தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு கெடுபிடி, கண்காணிப்பு இருப்பதில்லை. இதை, வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் பயங்கரவாதிகள், சமீப காலமாக, கொடூர தாக்குதல்களை நடத்துவது வாடிக்கையாக உள்ளது.இந்த கோர தாக்குதல், ஆப்கனில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. கடந்த, ஜூலை, 28 ல், தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின், நேற்று முன்தினம், மிக அதிக உயிர்களை பலிவாங்கிய இந்த தாக்குதல் நடந்துள்ளது.இந்த கொடூர தாக்குதலுக்கு, ஆப்கன் நாட்டின் தலைமை செயல் அதிகாரி, அப்துல்லா அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்து, ''மனித குலத்திற்கே எதிரானது இந்த தாக்குதல்,'' என, கூறியுள்ளார்.

மூலக்கதை