பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இந்தியா பேசும்: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இந்தியா பேசும்: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு

கல்கா: ‘‘தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை.   பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டுமே இருக்கும்,’’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கூறியுள்ளார். அரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:பாகிஸ்தானுடன் இனிமேல், பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விஷயமாக மட்டுமே இருக்கும். தீவிரவாதத்துக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே, அதனுடன் பேச்சுநடத்தப்படும். காஷ்மீரில்  370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது பாகிஸ்தானை பலவீனப்படுத்தி விட்டது. இது அவர்களுக்கு கவலை அளிக்கிறது. தற்போது, பாகிஸ்தான் ஒவ்வொரு நாடாக சென்று உதவி கேட்கிறது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடவடிக்கையை  தொடங்குங்கள் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறிவிட்டது. தீவிரவாதம் மூலம் இந்தியாவை நிலைகுலைய செய்ய பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், 56 அங்குல மார்பு கொண்ட நமது பிரதமர், முடிவுகள் எப்படி எடுக்க வேண்டும் என்பதை நாட்டுக்கு காட்டியுள்ளார். பாலகோட் தாக்குதல் நடக்கவே  இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார். ஆனால், தற்போது பாலகோட் தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிடுகிறது என்கிறார். இதன் மூலம், பாலகோட் தாக்குதல் நடந்ததை அவர் ஒப்புக்  கொண்டுள்ளார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

மூலக்கதை