குரங்கணியில் அனுமதியின்றி டிரெக்கிங் செல்ல முயன்று வனத்துறையினரை தாக்கி தப்பிய இஸ்ரேல் நாட்டினர் சிக்கினர்

தினகரன்  தினகரன்
குரங்கணியில் அனுமதியின்றி டிரெக்கிங் செல்ல முயன்று வனத்துறையினரை தாக்கி தப்பிய இஸ்ரேல் நாட்டினர் சிக்கினர்

போடி: வனத்துறையினரை தாக்கி விட்டு தப்பியோடிய இஸ்ரேலை சேர்ந்த 6 பேர் சிக்கினர். கைடின் தவறான வழிகாட்டுதலால் டிரெக்கிங் செய்வதற்கு தடை ெசய்யப்பட்ட பகுதிக்கு வந்ததாக, அவர்கள் மன்னிப்பு கடிதம் வழங்கியதால் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஓர் (32), ஏஞ்சலா (34), சோரம் (31), யோரம் (34), சுலிஜா (30), டிஸ்ட் (34) ஆகியோர், தமிழகம் வந்து கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தனர். கடந்த 17ம் தேதி 6 பேரும், தேனி மாவட்டம், போடி வழியாக மூணாறு சென்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர்.  இவர்களை கேரள மாநிலம்,  மூணாறு, நல்லதண்ணி எஸ்டேட்டை சேர்ந்த கைடு ரவி (46), டிரெக்கிங் செல்வதற்கு தடை செய்யப்பட்ட  குரங்கணி தீவிபத்து நடந்த பகுதிக்கு ஜீப்பில் அழைத்து சென்றுள்ளார். அங்கு டிரெக்கிங் செல்ல முயன்றபோது குரங்கணி போலீசார் 6 பேரையும் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. போடி வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்தபோது, 6 பேரும் வனத்துறை அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பி ஓடினர். விசாரணைக்கு பின் கைடு ரவி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய 6 பேரும், கொடைக்கானல், வட்டக்கானலில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது, கைடு ரவியின் தவறான வழிகாட்டுதலால் தடை செய்யப்பட்ட பகுதியென தெரியாமல் குரங்கணி வந்தோம். இனிமேல் இதுபோல் தவறு நடக்காது என்று மன்னிப்பு கடிதம் எழுதி தந்ததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மூலக்கதை