அர்ஜெண்டினாவின் ஓராண்டுக்கு முன் கடலில் மூழ்கிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
அர்ஜெண்டினாவின் ஓராண்டுக்கு முன் கடலில் மூழ்கிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

அர்ஜெண்டினா: அர்ஜெண்டினாவின் சன் ஹுவான் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி 44 சிப்பந்திகளுடன் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. நீர்முழ்கிக் கப்பலின் பேட்டரி அமைப்பில் தண்ணீர் புகுந்ததால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சன் ஹுவான் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. இதை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை அதிகாரிகள் ஈடிபட்டனர் மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசுகள் தேடும் பணிக்கு உதவிகள் செய்தன. நீண்ட நாட்களாக தேடியும் கப்பல் இருக்கும் இடம் தெரிய வராததால், கடலில் மூழ்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கப்பலை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கிய முதலமாண்டு நினைவு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் 800 மீட்டர் ஆழத்தில் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அர்ஜெண்டினக் கடற்படை கூறியது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலை மேலே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்தக் கப்பல் எப்படி மூழ்கியது, மீண்டும் அந்தக் கப்பல் மிதக்குமா? அதில் இருந்த சிப்பந்திகளின் நிலை என்னவானது? என அவர்களது உறவினர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, அதற்கான பதிலை தெரிவிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

மூலக்கதை