இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்தியா உறுதி: சிங்கப்பூரில் பிரதமர் மோடி தகவல்

தினகரன்  தினகரன்
இந்தோபசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்தியா உறுதி: சிங்கப்பூரில் பிரதமர் மோடி தகவல்

சிங்கப்பூர்: ‘‘இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும், செழிப்பும் நிலவ இந்தியா உறுதி பூண்டுள்ளது’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். நேற்று முன்தினம் ‘பின்டெக்’ விழாவில் பங்கேற்று பேசினார். 2ம் நாளாக நேற்று, சிங்கப்பூரில் நடைபெற்ற 13வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்றார். இது பிரதமர் மோடி பங்கேற்கும் 5வது கிழக்கு ஆசிய மாநாடாகும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, பொருளாதார வளமையை மேம்படுத்துவதற்காக கடந்த 2005ம் ஆண்டு கிழக்கு ஆசிய கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்போது முதல் இந்தியா இந்த கூட்டமைப்பு நடத்தும் மாநாட்டில் பங்கேற்று வருகிறது. சிங்கப்பூரில் நேற்று காலை ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கடல்வழி ஒத்துழைப்பு, செழுமையை உறுதி செய்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஆசியான் தலைவர்களுடன் சிறப்பான பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களுடன் நல்லுறவு நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசியான் நாடுகளில் அமைதியும், வளமையும் நிலவ எங்கள் வலிமையான பங்களிப்பை உறுதியாக அளிப்போம்’ என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிழக்கு ஆசிய மாநாட்டில் மோடி பங்கேற்றார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்கு ஆசிய மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் எனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டேன். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு நிலவ இந்தியா உறுதி பூண்டுள்ளது’ என கூறியுள்ளார். மாநாட்டில் பங்கேற்ற புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பிறநாட்டு பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.திருச்சி என்ஐடி.க்கு பரிசுசிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர்- இந்தியா ஹேக்கதான் இறுதி போட்டியில் பங்கேற்ற 6 குழுக்களுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். தொழில்நுட்பம், புதுமை மற்றும் இளைஞர் சக்தியை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 3 குழுக்களும்  சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுக்களும் வெற்றி பெற்றன. இந்த குழுவினருக்கு பிரதமர் மோடி பரிசளித்து பாராட்டினார். இந்திய குழுவில் ஐஐடி காரக்பூர், என்ஐடி திருச்சி, புனே எம்ஐடி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இடம் ெபற்றிருந்தனர். இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 60 மாணவர்கள் உள்பட 83 பேர் கொண்ட குழு சிங்கப்பூர் சென்றிருந்தது.

மூலக்கதை